வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (26/12/2018)

கடைசி தொடர்பு:13:00 (26/12/2018)

`ஆஸ்திரேலிய பௌலர்களைச் சோதித்த புதுக்கூட்டணி' - மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியா நிதானம்! #AUSvIND

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 215 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியா

photo credit: @bcci

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமனில் உள்ள நிலையில், இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. கிறிஸ்துமஸ்-க்கு மறுநாள் நடைபெறும் பாக்ஸிங் டே போட்டி என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் பட்டியலை இந்திய அணி நேற்றே அறிவித்துவிட்டது. அதன்படி, கடந்த போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக, ஹனும விஹாரி மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், ரோகித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இந்திய  அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஹனும விஹாரி - மயங்க் அகர்வால் களமிறங்கினர். 

புஜாரா

photo credit: @bcci

கடந்த இரு போட்டிகளிலும், தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவாக அவுட் ஆகிவந்த நிலையில், இந்த ஜோடி 19 ஓவர் வரை தாக்குப்பிடித்தது. ஹனும விஹாரி 66 பந்துகளைச் சந்தித்து, 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின், அகர்வால் - புஜாரா கூட்டணி அமைத்து ஆடினர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைச் சோதிக்கும் வகையில் நிதானமாக விளையாடினர். பலமுறை இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டும், ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் தவித்துவந்தார் மயங்க் அகர்வால். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக, இன்றைய அறிமுகப் போட்டியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

கோலி - புஜாரா

photo credit: @bcci

அசத்தலாக விளையாடிய அவர், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்து, அரை சதம் கடந்தார். 161 பந்துகளில் 76 ரன்கள் குவித்தபோது, கம்மின்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  அதன்பின் இணைந்த கோலி - புஜாரா ஜோடியும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளார்களைச் சோதித்தனர். புஜாரா பொறுமையாக விளையாடி, அரை சதம் அடித்தார். மறுமுனையில் கோலியும் சிறப்பாக விளையாடினார். இதற்கிடையே, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 47 ரன்களுடனும், புஜாரா 68 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க