வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (26/12/2018)

கடைசி தொடர்பு:16:37 (26/12/2018)

'லயானைச் சமாளிப்பது எப்படி?!' - மிடில் ஆர்டருக்குப் பாடமெடுத்த மயாங்க் அகர்வால் #AUSvIND

தேநீர் இடைவேளையின்போது அகர்வாலின் ஆட்டம் பற்றி விவாதித்த மைக்கேல் கிளர்க், முரளி கார்த்திக் இருவரும் சொன்ன ஒரே விஷயம் - ``நாதன் லயானை எப்படி எதிர்கொள்வது என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார் அகர்வால்" என்பதுதான்.

'லயானைச் சமாளிப்பது எப்படி?!' - மிடில் ஆர்டருக்குப் பாடமெடுத்த மயாங்க் அகர்வால் #AUSvIND

மெல்போர்ன் ஆடுகளத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் கம்மின்ஸ். அவரது உயரம், அசாத்திய பௌன்சர்கள் வீச உதவியது. குட் லென்த்தில் பிட்சான பந்துகளும்கூட தோள்பட்டை அளவு உயர்ந்தன. அதுமட்டுமல்லாமல், பௌலிங் க்ரீசை நன்கு பயன்படுத்தி, பந்தை ஸ்டம்ப் லைனில் கச்சிதமாக வீசிக்கொண்டிருந்தார். ஒரு பந்து ஸ்டம்ப்களின் `டாப்'பைக் குறிவைக்கும். அடுத்த பந்து கொஞ்சம்கூட எழும்பாமல் முழங்காலைப் பதம்பார்க்கும். திடீரென அடுத்த பந்து தோள்களைக் குறிவைக்கும். ஒருமுறை விஹாரியின் ஹெல்மெட்டையும் குறிவைத்தது! 

அவரைச் சமாளிப்பது புஜாரா, கோலி போன்ற அனுபவ வீரர்களுக்கே கடினமாக இருந்தபோது, அகர்வால் தடுமாறியதில் தவறேதுமில்லை. லெக் சைடு சென்ற பந்தை தடுத்தாட நினைக்க, கம்மின்ஸின் கூடுதல் பௌன்ஸ், அகர்வாலின் கிளவுசைப் பதம் பார்த்தது. ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அசத்தலாக கேட்ச் பிடிக்க, தன் அறிமுகப் போட்டியில் 76 ரன்களுடன் வெளியேறினார் அகர்வால். `அறிமுகப் போட்டியில் சதமடிக்கும் 16-வது இந்தியர்’ என்ற பெருமையை இழந்துவிட்டார். தேநீர் இடைவேளைக்கு முன்பு இரண்டு பந்துகளே இருந்த நிலையில் அவுட்டானதால், கடும் விரக்தியுடன் வெளியேறினார் அகர்வால். ஆனால், அதற்கு முன் இந்திய மிடில் ஆர்டருக்கு மிகப்பெரிய பாடமெடுத்துவிட்டார்.

மயாங்க் அகர்வால்

மெல்போர்னில் நடந்து வரும் 'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை விஹாரி - அகர்வால் ஜோடி தொடங்க, ஸ்டார்க் - ஹேசில்வுட் இணைகொண்டு அட்டாக்கைத் தொடங்கினார் பெய்ன். இரண்டு பேட்ஸ்மேன்களும் நிதானமாகத் தொடங்க, எட்டாவது ஓவரிலயே லயான் கையில் பந்தைக்கொடுத்தார் ஆஸ்திரேலிய கேப்டன். பெரிய அனுபவம் இல்லாத அந்த பேட்ஸ்மேன்களை லயானின் சுழல் கொண்டு வெளியேற்றத் திட்டமிட்டிருந்தார். காரணம் - இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களை அவரைப் போல் யாரும் அச்சுறத்தவில்லை. இரண்டு போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். புஜாரா தவிர்த்து, மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே அவரது பந்துவீச்சில் திணறினார்கள். கோலி உட்பட. இந்திய கேப்டன் இந்தத் தொடரின் 4 இன்னிங்ஸ்களில் லயானிடம் 2 முறை வீழ்ந்திருந்தார். லயான் பந்துவீச வந்தபோது ஆஸ்திரேலியர்களிடம் அதிக நம்பிக்கை வெளிப்பட்டது. ஆனால், அதைத் தவிடுபொடியாக்கினார் மயாங்க்!

அகர்வால் வேகன் வீல்

தேநீர் இடைவேளையின்போது அகர்வாலின் ஆட்டம் பற்றி விவாதித்த மைக்கேல் கிளர்க், முரளி கார்த்திக் இருவரும் சொன்ன ஒரே விஷயம் - ``நாதன் லயானை எப்படி எதிர்கொள்வது என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார் அகர்வால்" என்பதுதான். அந்த அளவுக்குத் தன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துச் சென்றார் அகர்வால். 

அடிலெய்ட், பெர்த் இரண்டு ஆடுகளங்களிலும் பௌன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஸ்பின்னும், பௌன்சும் சேர்ந்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டம் காட்டியது. அடிலெய்ட் போட்டியின்போது, அந்த பௌன்ஸையே சாதகமாகப் பயன்படுத்தி, லயானை சிறப்பாகக் கையாண்டார் புஜாரா. கிரீசிலிருந்து வெளியே வந்துதான் பெரும்பாலான பந்துகளை எதிர்கொண்டார். அதிலும் பந்துகளை அதிகமாக pad கொண்டுதான் தடுத்தார். விளையாடவில்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் லெக் சைடில்தான் லயான் பந்துவீச்சை ஆட முயற்சி செய்தனர். சிங்கிள் ஆடுவதாக இருந்தாலும், பௌண்டரி அடிப்பதாக இருந்தாலும் விளையாடியது லெக் சைட்தான். புஜாராவுமே லயான் பந்துவீச்சில் லெக் சைட்தான் ரன் எடுத்தார். 

அகர்வால்

லயான் பந்துவீச்சை லெக் சைடில் ஆடுவதுதான் இந்திய பேட்ஸ்மேன்களின் டெம்ப்ளேட்டாக இருந்தது. கோலி, ரஹானே, ரோஹித், புஜாரா என எல்லோருமே அப்படித்தான் ஆடினார்கள். அப்படி ஆடித்தான் அவுட்டும் ஆனார்கள். ஆனால், மயாங்க் ஆடியது வேறு மாதிரியான ஆட்டம். புஜாராபோல் `false shots' ஆட முடியாது. ஏனெனில், இந்த மெல்போர்ன் ஆடுகளத்தின் பெளன்சைக் கணிக்கவே முடியாது. திடீரென்று எழும்பாமல் எல்.பி.டபிள்யூ ஆக வாய்ப்பு அதிகம். அதனால் புது பாணியில் ஆடினார் அகர்வால். புஜாரா போல் பெரும்பாலான பந்துகளை க்ரீஸுக்கு வெளியே வந்துதான் ஆடினார். ஆனால், அனைத்தையும் பேட்டால் ஆடினார். அதுவும் லெக் சைட் மட்டும் ஆடாமல், 180 டிகிரியிலும் லயான் பந்துகளை அடித்து ஆடினார். 

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து, ஸ்டம்புகள் நோக்கிச் சுழன்ற பந்துகளை, அகர்வால் எதிர்கொண்டவிதம் அபாரம்! கிரீஸுக்கு வெளியே கிராஸாக நகர்ந்து, தனக்கான `ஸ்பேஸை' உருவாக்கிக்கொண்டு ஆஃப் சைடில் அந்தப் பந்துகளை அற்புதமாக விளையாடினார். லயான் பந்துவீச்சில் அவர் சந்தித்த இரண்டாவது பந்தையே அப்படி அழகாக ஸ்வீப்பர் கவர் திசையில் பௌண்டரியாக்கினார். மிகவும் நிதானமாகவும் கட்டுக்கோப்புடனும் அவரை எதிர்கொள்ள, லயானின் திட்டங்கள் எடுபடாமல் போனது. அதேசமயம், மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்சாகி, கொஞ்சம் பௌன்ஸ் ஆன பந்துகளை `பேக் ஃபூட்' வைத்து டிஃபண்ட் செய்யவும் அகர்வால் தவறவில்லை. கம்மின்ஸ், ஹேசில்வுட் பந்துகளில் கொஞ்சம் தடுமாறினாலும், லயானை மிகவும் நேர்த்தியாக எதிர்கொண்டார். 

லயான் - அகர்வால்

முதல் ஸ்பெல்லில் பந்துவீசியபோது சில்லி பாயின்ட், ஷார்ட் லெக் ஃபீல்டர்கள் வைத்திருந்தார் லயான். இந்தத் தொடரில் பெரும்பாலும் அந்த செட் - அப்போடுதான் பந்துவீசினார். ஆனால், இரண்டாவது ஸ்பெல் வீசவந்தபோது, அந்த ஃபீல்டர்களெல்லாம் இல்லாமல், முழுக்க முழுக்க டிஃபன்ஸிவ் ஃபீல்டிங் செட் அப் வைத்திருந்தார். இந்திய பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து அட்டாக் செய்துகொண்டிருந்த லயானை, டிஃபன்ஸிவாக யோசிக்கவைத்தார் அகர்வால். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது செஷனுக்குப் பிறகு, இப்போதுதான் லயான் நெருக்கடியை உணர்ந்தார். 

லயான் பந்துவீச்சில் 46 பந்துகளை எதிர்கொண்ட அகர்வால், 27 ரன்கள் எடுத்தார். அதில் 4 பௌண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம். அந்த 4 பௌண்டரிகளில் 2 கவர் டிரைவ்கள். முதல் ஸ்பெல்லில், லயான், அகர்வாலுக்குப் பந்துவீசியபோது கவர் திசையில் மட்டும்தான் ஃபீல்டர்கள் இல்லை. மற்ற அனைத்து ஏரியாவிலும் ஃபீல்டர்கள் நின்றிருந்தனர். ரன் சேர்க்கவேண்டுமென்றால் கவர் மட்டும்தான் ஒரே ஆப்ஷன். பந்து சரியாகப் படவில்லையென்றால், கேட்ச் பிடிப்பதற்கு ஷார்ட் லெக், சில்லி பாயின்ட், ஸ்லிப், கீப்பர் என நான்கு பேர் இருக்கிறார்கள். ஆனால், அதை அவ்வளவு நேர்த்தியாக ஆடினார் மயாங் அகர்வால். 

லயான்

பாய்ன்ட் முதல் லாங் ஆஃப் வரையிலான ஏரியாவில் அவர் அடித்த 26 ரன்களில், 14 லயான் பந்துவீச்சில் எடுக்கப்பட்டது. லயானை, ஆஃப் சைட் அவ்வளவு நேர்த்தியாக எதிர்கொண்டார். பெர்த் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைவான எகானமி கொண்டிருந்த ஆஸி பௌலர் லயான்தான். முதல் இன்னிங்ஸில் 1.92, இரண்டாவது இன்னிங்ஸில் 2.05. ஆனால், இன்று பந்துவீசிய 5 பௌலர்களில், இவரது எகானமிதான் (2.80) அதிகம். அதுமட்டுமல்லாமல், பந்துவீசிய 21 ஓவர்களில் விக்கெட்டே இல்லை. காரணம் - லயானின் பந்துவீச்சை ஆஃப் சைடிலும் அட்டாக் செய்து, அவரது திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததுதான்! இந்தத் தொடரில் லயானுக்கு எதிராக இந்திய வீரர்கள் முயற்சி செய்யாத, முயற்சி செய்யத் தயங்கிய ஒரு விஷயத்தை, தன் முதல் போட்டியில், அதுவும் மெல்போர்ன் மைதானத்தில் செய்துள்ளார் அந்த வீரர். உண்மையில் மயாங்க் அகர்வால், மிகச்சிறந்த அறிமுக இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். 

Pic Courtesy : twitter.com/BCCI


டிரெண்டிங் @ விகடன்