புஜாரா, கோலி, ரோஹித் அசத்தல்... இரண்டாவது நாளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா | india scored 443 against australia

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (27/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (27/12/2018)

புஜாரா, கோலி, ரோஹித் அசத்தல்... இரண்டாவது நாளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்களைக் குவித்த இந்திய அணி, டிக்ளேர் செய்துள்ளது.

கோலி

PC : ICC 

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிய, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது டெஸ்ட் தொடர். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரைச் சமன்செய்தது. இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.

புஜாரா

PC : ICC 

முதல் நாளான நேற்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங்கைச் செய்தது. அறிமுக வீரர் மயங்க் அகர்வால், 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர். இந்நிலையில், இரண்டாது நாளான இன்று புஜாரா- விராட் கோலி இணை ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு இந்த இணை சிம்ம சொப்பனமாக விளங்கியது.

ஆஸ்திரேலியா

PC : ICC 

அபாரமாக ஆடிய புஜாரா, சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். இதையடுத்து, மிட்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் கோலி வெளியேறினார். களத்தில் இறங்கிய ரஹானே, புஜாராவுடன் கைகோத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார் புஜாரா. பின்னர், இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்காத நிலையில், ரோஹித் நிலைத்து ஆடி 63 ரன்களைச் சேர்த்து, களத்தில் உள்ளார். இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்துள்ளது.