வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (27/12/2018)

கடைசி தொடர்பு:16:04 (27/12/2018)

15 பந்துகளில் 6 விக்கெட்டுகள்... டிரென்ட் போல்ட்டின் ஸ்விங் ஜாலம்! #NZvSL

போல்ட்டின் அற்புதமான ஸ்விங், அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்துவிட்டது. வலது கை பேட்ஸ்மேன்களுக்கும் சரி, இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் சரி, அவர்களின் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்து, அவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார் இந்த கிவி பௌலர். 

15 பந்துகளில் 6 விக்கெட்டுகள்... டிரென்ட் போல்ட்டின் ஸ்விங் ஜாலம்! #NZvSL

மெல்போர்னில் நடந்துகொண்டிருக்கும் `பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகள் வீழ்த்த ஆஸ்திரேலிய பௌலர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்களின் நிதான ஆட்டத்தால், கிட்டத்தட்ட இரண்டு நாள்களில் ஐந்து விக்கெட் மட்டுமே விழுந்திருக்கிறது. அதேசமயம், டாஸ்மானியக் கடலின் அந்தப் பக்கம்... கிறைஸ்ட்சர்ச் நகரில், ஒரு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விக்கெட் மழையில் நனைந்துகொண்டிருக்கிறது. முதல் நாளில் 14 விக்கெட்டுகள் (நியூசிலாந்து - 10, இலங்கை - 4) வீழ, இரண்டாம் நாளின் முதல் 9 ஓவர்களிலேயே இலங்கையின் அடுத்த 6 விக்கெட்டுகளும் சரிந்தன. நியூசி வேகம் டிரென்ட் போல்ட் - 15 பந்து இடைவெளியில் அந்த 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இலங்கை அணியை பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார். 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. வெல்லிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை, ஆஞ்செலோ மாத்யூஸின் மாரத்தான் இன்னிங்ஸின் உதவியாலும் மழையின் தயவாலும் டிரா செய்தது. கிறிஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. சுரங்கா லக்மல், லஹிரு குமாரா ஆகியோரின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து. டிம் சவுத்தி மட்டும் அரைசதம் (68 ரன்கள்) கடந்தார். 

டிம் சௌத்தி

ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால், இலங்கை அணியும் தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் போல்ட் - சவுத்தி இணை மிரட்டலாகப் பந்துவீசியது. வேகம், ஸ்விங் என இரண்டும் கைகொடுக்க, இலங்கை பேட்ஸ்மேன்களை திணறவைத்தனர். இலங்கை இன்னிங்ஸின் 37-வது ஓவர்... போல்ட் வேட்டை தொடங்கியது. 

பந்து 1 - விக்கெட் 1 : ஓவர் - 36.4 : முந்தைய பந்தை ஷார்ட் பாலாக வீசிய போல்ட், இந்தப் பந்தை ஃபுல் லென்த்தில் பிட்ச் செய்தார். பிட்சாகி, பந்து அவுட் ஸ்விங்காக ரோஷன் சில்வா அதை எதிர்பார்க்கவில்லை. ஸ்விங்கை கணிக்காமல், அவர் அதை அடிக்க, பந்து எட்ஜாகி மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த சௌத்தியிடம் சிக்கியது.

பந்து 2 - பௌண்டரி : ஓவர் - 36.5 : மீண்டும் ஃபுல் லென்த். ஸ்டம்புகள் நோக்கி வந்த பந்தை மிட் விக்கெட் திசையில் பௌண்டரி ஆக்கினார், புதிய பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா. இலங்கை - 94/5.

டிரென்ட் போல்ட்

பந்து 3 - டாட் பால் : ஓவர் - 36.6 : லைன், லென்த் இரண்டையுமே மாற்றினார் போல்ட். குட் லென்த்தில் பிட்சாகி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை, டிக்வெல்லா ஆடவில்லை. 

பந்து 4 - விக்கெட் 2 : ஓவர் - 38.1 : ரோஷன் சில்வாவுக்கு வீசிய அதே பந்துதான். ஆனால், இதுவும் அவுட் ஸ்விங். அதில் ஏமாந்தார் டிக்வெல்லா. வலது கை பேட்ஸ்மேனான சில்வாவுக்கு அவிட் ஸ்விங் செய்த போல்ட், இடது கை பேட்ஸ்மேனான டிக்வெல்லாவுக்கும் அவுட் ஸ்விங் செய்தார். அதாவது இரண்டு பந்துகளும் பேட்ஸ்மேனுக்கு வெளியே நகர்ந்து சென்றன. டிக்வெல்லாவும் எட்ஜாக, இவரையும் கேட்ச் பிடித்தார் சௌத்தி. இந்த முறை இரண்டாவது ஸ்லிப்புக்கு அருகில் சென்ற கேட்சை, பாய்ந்து ஒற்றைக் கையில் பிடித்து அசத்தினார். பந்தை இரண்டு திசையிலும் ஸ்விங் செய்து, போல்ட் காட்டிய வேரியேஷன் வேற லெவல்! இலங்கை - 100/6.

பந்து 5 - டாட் பால் : ஓவர் - 38.2 : புதிய பேட்ஸ்மேன் தில்ருவான் பெரேரா. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லென்த்தில் பிட்சான பந்தை ஆஃப் சைட் ஸ்ட்ரோக் செய்தார் பெரேரா.

பந்து 6 - டாட் பால் : ஓவர் - 38.3 : அதே பந்து. கொஞ்சம் முன்னாடியே பிட்சாகி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றது. கவர் திசையில் ஆடினார் பேட்ஸ்மேன். 

போல்ட்

பந்து 7 - டாட் பால் : ஓவர் - 38.4 : இன்னும் முன்னால் பிட்சாகி வெளியே சென்றது பந்து. பெரேரா ஆடாமல் கீப்பருக்கு விட்டுவிட்டார்.

பந்து 8 - விக்கெட் 3 : ஓவர் - 38.5 : போல்ட் வீசியதில் ஆகச்சிறந்த பந்து. முந்தைய 3 பந்துகளும், பிட்சாகி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றன. ஆனால், இந்தப் பந்து பெரேராவை முற்றிலும் ஏமாற்றியது. ஃபுல் லென்த் டெல்வரி - ஆனால், குட் லென்த்துக்கு அருகில்தான் பிட்சானது. பிட்சானதோ மிடில் ஸ்டம்ப் லைன். இடது கை பௌலரான போல்ட், `ஓவர் தி ஸ்டிக்' வந்து வீசுகிறார். அப்படியிருக்கையில், பந்தின் `angle' எப்படியும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேதான் செல்லும். ஆனால், போல்ட்... பந்தின் ஆங்கிளை மாற்றினார். அதுவரை பிட்சாகி, அதே ஆங்கிளில் சென்ற பந்து, இப்போது நேராகப் பயணித்தது. பந்து வெளியே செல்லும் என்று நினைத்து, அதை ஆடாமல் விட்ட பெரேராவின் கால்களைப் பதம்பார்க்க, விரலைத் தூக்கினார் நடுவர். போல்ட்... யூ பியூட்டி! மிக அற்புதமான பந்து. பெரேரா ரிவ்யூ எடுத்தார். விக்கெட்டோடு சேர்ந்து அதுவும் வீணானது. இலங்கை - 100/7.

பந்து 9 - விக்கெட் 4  : ஓவர் - 38.6 : சுரங்கா லக்மல். போல்ட் பந்துவீசும்போது அவரது கைகளை கூர்ந்து கவனித்தார். ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்சாக வாய்ப்பு. லெக் சைட் பந்தை ஆடும் முனைப்போடு, ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்ந்தார். போல்ட் - மீண்டும் ஏமாற்றினார். பந்து பிட்சாவதற்கு முன்பே, மிடில் ஸ்டம்ப் நோக்கி நகர்ந்துவிட்டது. அது பிட்சை அடைந்ததோ யார்க்கர் லென்த்தில்! பிட்சான பின்பும் இன்ஸ்விங். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனும் நிச்சயம் திணறியிருப்பார். லக்மலுக்கு வாய்ப்பே இல்லை. மீண்டும் எல்.பி.டபிள்யூ. அந்த ஓவரின் மூன்றாவது விக்கெட். இலங்கை - 100/8.

NZvSL

பந்து 10 - டாட் பால் : ஓவர் - 40.1 : போல்டின் ஹாட்ரிக் வாய்ப்பைத் தடுத்தார் துஷமந்தா சமீரா. ஃபுல் லென்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தடுத்தாடினார்.

பந்து 11 - விக்கெட் 5 : ஓவர் - 40.2 : கிட்டத்தட்ட சமீரா அவுட்டான விதத்தில்தான் சமீராவும் வெளியேறினார். குட் லென்த்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்சானாலும், அந்தப் பந்தைப் போல் அதிக மூவ்மென்ட் இல்லாமல், நேராகச் சென்று pad-ஐப் பதம்பார்த்தது. அவுட். இலங்கை - 104/9. 

பந்து 12 - டாட் பால் : ஓவர் - 40.3 : ஃபுல் லென்த்தில் பிட்சாகி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை, அடிக்க நினைத்தார் புதிய பேட்ஸ்மேன் லஹிரு குமாரா. ஆனால், பந்து பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றது. 

பந்து 13 - டாட் பால் : ஓவர் - 40.4 : அதே பந்து. இம்முறை கொஞ்சம் உள்ளே ஸ்டம்புகள் நோக்கி வந்தது. தடுத்தாடினார் இடது கை பேட்ஸ்மேனான குமாரா.

போல்ட்

பந்து 14 - டாட் பால் : ஓவர் - 40.5 : ஃபுல் லென்த்தில் பிட்சாகி, அவுட் ஸ்விங் ஆனது. அடிக்க நினைத்தார். மிஸ்.

பந்து 15 - விக்கெட் 6 : ஓவர் - 40.6 : ஃபுல் லென்த்தில், லெக் ஸ்டம்ப் லைனில் பிட்சானது. பந்தின் ஆங்கிளைப் பார்த்த குமாரா, லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் என்று நினைத்து நகர்ந்தார். பெரும்பாலும் எல்லோருக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். ஆனால், எதிர்பாராத ஸ்விங். மீண்டும் கால்களைப் பதம் பார்த்தது. நடுவர் அவுட் கொடுக்க, மிச்சமிருந்த ரிவ்யூவை சம்பிரதாயத்துக்குப் பயன்படுத்தினார்கள். பயனில்லை. தொடர்ந்து நான்காவது எல்.பி.டபிள்யூ. இலங்கை 104 ரன்களுக்கு ஆல் அவுட். போல்ட் - 15-8-30-6! 

15 பந்துகளில் இலங்கை இன்னிங்ஸை காலி செய்துவிட்டார் டிரென்ட் போல்ட். அவரது அற்புதமான ஸ்விங், அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்துவிட்டது. வலது கை பேட்ஸ்மேன்களுக்கும் சரி, இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் சரி, அவர்களின் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்து, அவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார் இந்த கிவி பௌலர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுதான். இந்த 6 விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் மறுமுனையில் மேத்யூஸ் நின்றார் என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து, இம்முறை நிதானமாக இலங்கையை எதிர்கொண்டது. ஜீத் ராவல், வில்லியம்சன் இருவரும் முறையே 74, 48 ரன்களில் வெளியேறினர். டாம் லாதம் (74), ராஸ் டெய்லர் (25) களத்தில் இருக்கின்றனர். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து இரண்டு விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் (முன்னிலை - 305) எடுத்துள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்