`புஜாராவின் இன்னிங்ஸில் ப்ளஸும் இருக்கிறது; மைனஸும் இருக்கிறது!’ - ரிக்கி பாண்டிங்கின் லாஜிக் | Pujara 100 match-winning knock or cost of the game, says Ricky Ponting

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (27/12/2018)

கடைசி தொடர்பு:21:45 (27/12/2018)

`புஜாராவின் இன்னிங்ஸில் ப்ளஸும் இருக்கிறது; மைனஸும் இருக்கிறது!’ - ரிக்கி பாண்டிங்கின் லாஜிக்

புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தியுள்ளார். புஜாராவின் பொறுமையான ஆட்டம் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சோதனைக்கு உள்ளாக்கியது. அதிலும் விராட் - புஜாரா பார்ட்னர்ஷிப் பொறுமையின் உச்சம் எனச் சொல்லலாம். 414 பந்துகளை எதிர்கொண்ட இந்த இணை 173 ரன்களை எடுத்தனர். இந்தப் போட்டியில் 319 பந்துகளை சந்தித்த புஜாரா 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா பேட்டிங் அருமையானதாக இருந்தது என புகழ்ந்துள்ள ரிக்கி பாண்டிங் அவரது ரன் ரேட் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்

இந்தப் போட்டி தொடர்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ``மெல்போர்ன் மைதானத்தில் ஒரு வெற்றிகரமான ஆட்டத்தை புஜாரா வெளிப்படுத்தியுள்ளார் என்பதா அல்லது ஒரு அணியின் வெற்றியைப் பறிக்கும் இன்னிங்ஸ் எனக் கூறுவதா. 319 பந்துகளைச் சந்தித்த புஜாரா 106 ரன்கள் எடுத்துள்ளார். மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் கோலி - புஜாரா 173 ரன்களை திரட்டியுள்ளனர். புஜாரா இந்தப் போட்டியில் 10 பவுண்டரிகளை அடித்துள்ளார். இந்தியா தற்போது இருக்கும் நிலையில் வெற்றியை நோக்கி முன்னேறலாம். அப்படி இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் அது புஜாராவின் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக அமையும். ஆனால், இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய வீரர்களை இரண்டு இன்னிங்ஸ்களிலும் முழுமையாக வீழ்த்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்றால், அவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவே அர்த்தம்.

கோலி

புஜாரா களத்தில் இருக்கும் வரை இந்திய அணி ரன் ரேட்டை உயர்த்துவது சற்று கடினமானதாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். இந்தத்தொடரில் இரண்டாவது செஞ்சுரி அடித்துள்ளார். சிறப்பாக விளையாடினார். தான் ஆட்டமிழக்கக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார். ஆனால், அவர் ரன் குவிப்பதில் தேக்கம் அடைகிறார். டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டை தக்க வைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று ரன்களும் முக்கியமானது. இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களான ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன்கள். பேட்டிங்கிற்கு சாதகமான மெல்போர்ன் போன்ற ஆடுகளங்களில் குறைவான ரன் ரேட்டை வைத்துக்கொண்டு வெல்வது என்பது கடினமான ஒன்று’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்துள்ளது. மூன்றாம் நாளான நாளை ஆஸ்திரேலியா வீரர்களின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்காக வாய்ப்பு உள்ளது.