வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (28/12/2018)

கடைசி தொடர்பு:08:58 (28/12/2018)

`சிக்கல் இல்லை; விளையாடலாம்' - ஸ்டீவ் ஸ்மித்துக்கு அனுமதி அளித்தது வங்கதேச கிரிக்கெட் போர்டு!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் வங்காள தேசத்தில் நடைபெறவுள்ள பிரிமீயர் லீக்கில் விளையாடுவதில் இருந்த தடை நீங்கியுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்

பால் டேம்பரிங் புகாரில் சிக்கி ஓராண்டு தடையில் இருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். அவரது தடை முடிவடைய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், மீண்டும் அணிக்குத் திரும்பும் வகையில் உள்ளூர் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக ஜனவரி மாதம் தொடங்கவுள்ள வங்கதேச பிரிமீயர் லீக் போட்டியான பி.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாள்களில் அணியினருடன் இணையும் முனைப்பில் ஸ்மித் இருந்தார். இந்த நிலையில்தான் ஸ்மித் பி.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு வங்காள தேசம் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.

ஸ்மித்

பி.பி.எல் ஏலத்தில் ஸ்மித்தை கொமிலா விக்டோரியன்ஸ் அணி எடுக்கவில்லை. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கைதான் அணி நிர்வாகம் எடுத்திருந்தது. சோயப் மாலிக் பி.பி.எல் தொடரின் மத்தியில் சர்வதேச அணிக்குத் திரும்புவதால் மாற்று வீரராக ஸ்மித்தை ஒப்பந்தம் செய்தனர். இதற்கு மற்ற அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பி.பி.எல் தொடரில் ஸ்மித் விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய ஸ்மித், ``பி.பி.எல் போட்டிகளில் நான் விளையாடுவதாகத்தான் இருந்தது. ஆனால், அங்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. வங்கதேச ப்ரீமியர் லீக் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், அடுத்து வரும் ஐ.பி.எல் மற்றும் பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுவேன்.

ஸ்மித்

photo credit:@cricket.com.au

உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்குத் தயாராக இந்தத் தொடர்கள் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். இந்த் நிலையில், ஸ்மித் பி.பி.எல் போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என வங்கதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாங்கள் முதலில் அனுமதி கொடுக்கவில்லை. தற்போது நான்கு அணிகள் தனித்தனியாக, அவர்கள் தெரிவித்த எதிர்ப்பை திரும்பப் பெறுவதாக மெயில் அனுப்பியுள்ளனர். இதனால் அவர் கலந்துகொள்வதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க