வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (28/12/2018)

கடைசி தொடர்பு:19:42 (28/12/2018)

`எனக்கு எந்த மாற்றமும் தேவையில்லை!’ - ரொனால்டோவுக்கு மெஸ்ஸி கொடுத்த பதில்

இத்தாலி கிளப் அணியில் இணையுங்கள் என்ற ரொனால்டோவின் சவாலுக்கு மெஸ்ஸி பதிலளித்திருக்கிறார். 

ரொனால்டோ - மெஸ்ஸி

கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டார்களான போர்ச்சுகலின் ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி ஆகிய இருவருக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கிளப் போட்டிகளிலும் இந்த ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக விளையாடி வந்த ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகி, இத்தாலியின் யுவான்டஸ் அணியில் சமீபத்தில் இணைந்தார் ரொனால்டோ. ஆனால், மெஸ்ஸியோ ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காகத் தனது 13 வயதில் இருந்து விளையாடி வருகிறார். 

ரொனால்டோ - மெஸ்ஸி

`மெஸ்ஸியை மிஸ் செய்கிறீர்களா?’ என்று சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரொனால்டோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரொனால்டோ, ``அவரும் ஒருநாள் இத்தாலி வருவார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல் (தேசிய அணி) ஆகியவற்றுக்காக விளையாடி இருக்கிறேன். ஆனால், மெஸ்ஸி இன்னும் ஸ்பெய்னில்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். என்னைப் போலவே அவரும் சவால்களை ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தார். எனினும் ஸ்பெயினில் மெஸ்ஸி மகிழ்ச்சியாக இருந்தால் அதற்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். இத்தாலியில் நான் யாரையும் மிஸ் செய்ததாக உணரவில்லை. ஒருவேளை மெஸ்ஸிக்கு அத்தகைய உணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும்’’ என்றும் ரொனால்டோ கூறியிருந்தார். 

மெஸ்ஸி - ரொனால்டோ


இந்தநிலையில் ரொனால்டோவின் இந்தக் கருத்துக்கு மெஸ்ஸி பதிலளித்திருக்கிறார். ரொனால்டோ குறித்த கேள்விக்குப் பதிலளித்த மெஸ்ஸி, ``ரொனால்டோவின் சவாலை ஏற்று இத்தாலி கிளப்பில் இணைவதா? எனக்கு எந்த மாற்றமும் தேவையில்லை. உலகின் சிறந்த அணியில் நான் இருக்கிறேன். என்னுடைய சவால்கள் ஒவ்வோர் ஆண்டும் மாறிவருகின்றன. புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்காக அணியை அல்லது லீக் தொடர்களையோ மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் எனது சொந்த அணியில் இருக்கிறேன்; எனக்கு எந்த மாற்றமும் தேவையில்லை’’ என்று மெஸ்ஸி போல்ட் ஸ்டேட்மென்ட் தட்டியிருக்கிறார்.