வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (28/12/2018)

கடைசி தொடர்பு:20:45 (28/12/2018)

`வாட்சன், அம்பாதி ராயுடு - ஃபேர் பிளே அவார்டு! - ஐ.பி.எல் ரகசியம் சொன்ன தோனி

கடந்த ஐ.பி.எல் தொடருக்கு முன்பாக சென்னை அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் இருவர் என்னை கவலைகொள்ளச் செய்தனர் என அந்த அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

தோனி

சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய மகேந்திரசிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ``ஐ.பி.எல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தாகத்தோடு ஒவ்வொர் ஆண்டும் விளையாடுவோம். அதேபோல், களத்தில் சிறப்பாகச் செயல்படும் அணிகளுக்கு வழங்கப்படும் ஃபேர் பிளே அவார்டையும் வாங்க வேண்டும் என்று நான் நினைப்பேன். அது முக்கியமானதும்கூட. கோப்பையை வெல்வதற்காகக் கடுமையாகப் போராட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் எதிரணி வீரர்களை மதித்து களத்திலும் சிறப்பாகச் செயல்படுவது அவசியம். 

ஆனால், கடந்த ஐ.பி.எல் தொடருக்கு முன்னால், சி.எஸ்.கே அணியில் இடம்பெற்றிருந்த இரண்டு வீரர்கள் ஃபேர் பிளே அவார்டு குறித்து யோசிக்க வைத்தனர். வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகிய இருவர்தான் அவர்கள் என்னை அப்படி சிந்திக்க வைத்தவர்கள். அவர்கள் இருவருமே இயற்கையாக ஆக்ரோஷமான குணம் கொண்டவர்கள். அதிலும் ராயுடு, அம்பயர் வைட், நோபால் வழங்கவில்லை என்றால் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கிவிடுவார். ஐ.பி.எல் போட்டிக்கும் முன்பாக இந்த விஷயங்கள் என்னைக் கவலைகொள்ள வைத்தது. இதுகுறித்து நான் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுடன் விவாதித்ததுண்டு. அவரது வழிகாட்டுதல் என்றுமே பயன்தரக்கூடியது. இந்தியா சிமென்ட்ஸ் இல்லை என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை. நானும் இங்கு நின்றிருக்க மாட்டேன்’’ எனப் பேசினார்.

புத்தகம்

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, ராகுல் டிராவிட், கபில் தேவ், சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ்.லட்சுமணன், ஷேவாக் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை தோனி பெற்றுக்கொண்டார். ‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தின் பயணம் குறித்தும் அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீநிவாசனின் பங்களிப்பு குறித்த தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.