மெல்போர்ன் மைதானத்தில் வெடித்த இனவெறி சர்ச்சை! - அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் | Few peoples from MCG were evicted from ground because of there racist remarks

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (29/12/2018)

கடைசி தொடர்பு:07:51 (29/12/2018)

மெல்போர்ன் மைதானத்தில் வெடித்த இனவெறி சர்ச்சை! - அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம்

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் விதமாக பேசியதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வெறும் கிரிக்கெட் போட்டியாக மட்டும் இருப்பதில்லை. அது ஒரு போராட்டக்களம். மைதானத்தில் இருக்கும் வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் மோதலைப் போலவே, ரசிகர்களுக்கும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. 

தற்போது புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அஸ்திரேலிய அணிகள் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் சமனில் உள்ளது. இந்த நிலையில்தான் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே (டிசம்பர் 26) அன்று தொடங்கியது. 

கிரிக்கெட்

இந்தப் போட்டியிலும், வீரர்கள் மத்தியில் வழக்கமான ஸ்லெட்ஜிங் யுத்தங்கள் தொடர்ந்தது. குறிப்பாக ரோகித் ஷர்மா மற்றும் பன்ட் ஆகியோரிடம் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னே வம்பிழுத்தார். இதுபோன்ற மோதல்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம், போட்டியைக்காண வந்த ரசிகர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எம்.சி.ஜி

போட்டியின் முதல் இரண்டு நாள்களில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் மோசமாகப் பேசியதாக சில குற்றச்சாட்டுகள் சென்றுள்ளது. இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இறங்கியது. போட்டியின் முதல் நாளே புகார்கள் வந்ததால், இரண்டாம் நாள், ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர். ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்களையும், மைதானத்தில் போட்டியைக் காண வந்திருந்த இந்திய ரசிகர்களையும் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் மைதான நிர்வாகத்துக்கும் தகவல் செல்ல, இது மீண்டும் தொடர்ந்தால், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அனைத்து ரசிகர்களும் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மைதானம்

 இந்நிலையில் மூன்றாவது நாளிலும் ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், அதிரடியாகக் குறிப்பிட்ட நபர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. பதிவு செய்யப்பட்ட வீடியோவின் உதவியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

ரசிகர்கள்  

இது தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் செய்திதொடர்பாளர் ஒருவர்,  ``ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஒருபோதும் இனவாத கருத்தை ஏற்றுக்கொள்ளாது. அது வீரர்கள், ரசிகர்கள், மைதான ஊழியர்கள் என யார் மீது சொல்லப்பட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ரசிகர்களின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்றார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து வரவேற்பைப் பெற்றுள்ளது.