`பேச மட்டும்தான் தெரியும் இந்த தற்காலிகக் கேப்டனுக்கு!’ - டிம் பெய்னுக்குப் பதிலடி கொடுத்த ரிஷப் பன்ட் | Rishab pant teasing Tim paine got stump mic

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (29/12/2018)

கடைசி தொடர்பு:10:39 (29/12/2018)

`பேச மட்டும்தான் தெரியும் இந்த தற்காலிகக் கேப்டனுக்கு!’ - டிம் பெய்னுக்குப் பதிலடி கொடுத்த ரிஷப் பன்ட்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. 

ரிஷப் பன்ட்

Photo Credit:ICC

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 291 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. சவாலான இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 50.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் டிம் பெய்ன் 15 ரன்களுடனும் கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர். 

ரிஷப் பன்ட்

Photo Credit:ICC

இந்தத் தொடரில் இந்திய - ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே களத்தில் நிகழும் சுவாரஸ்யமான உரையாடல்கள் ஸ்டம்ப் மைக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய வீரர் ரிஷப் பன்ட் பேட் செய்துகொண்டிருந்தபோது அவரை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் சீண்டினார். `ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் தோனி தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியுமா? இதனால், உங்களின் ஆஸ்திரேலிய விடுமுறை நாள்களின் எண்ணிக்கை குறையும். நீங்கள் ஏன் ஹோபார்ட் ஹரிக்கேன் அணிக்காக விளையாடக் கூடாது? ஹோபார்ட் பொழுதுபோக்க சிறந்த நகரம். நீங்கள் என் குழந்தையைக் கவனித்துக்கொண்டால், நான் என் மனைவியுடன் சினிமாவுக்குச் சென்று வருவேன்’ என்று டிம் பெய்ன் பேசியிருந்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது. வீரர்கள் இடையில் நடக்கும் உரையாடல்கள் விவகாரத்தில் ஸ்டம்ப் மைக்குகளைப் பயன்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. 

ரிஷப் பன்ட்

இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது டிம் பெய்ன் பேசியதற்கு ரிஷப் பன்ட் பதிலளித்திருக்கிறார். டிம் பெய்ன் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பேசிய பன்ட், `தற்காலிகக் கேப்டன் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரை அவுட்டாக்க நீங்கள் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் செய்வதெல்லாம் பேசுவது.. பேசுவது.. பேசிக்கொண்டே இருப்பது; இதை மட்டும்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.