வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (29/12/2018)

கடைசி தொடர்பு:14:11 (29/12/2018)

பயிற்சி ஆட்டம் டிரா... ஆசிய கோப்பைக்கு இந்திய அணி ரெடி!

பயிற்சி ஆட்டம் டிரா... ஆசிய கோப்பைக்கு இந்திய அணி ரெடி!

சிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் 17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2019 ஜனவரியில் தொடங்க உள்ளது. ஆசிய நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணி, ஆசியாவின் சாம்பியனாக முடிசூடப்படும்.

2019-ம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்தத் தொடரில், இந்தியா, தாய்லாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன. 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளன. தாய்லாந்து, பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் இந்திய அணி க்ரூப் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய கால்பந்து அணி

ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான முன்னோட்டமாக இந்தியா - ஓமன் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. 2018-ம் ஆண்டு, ஓமன் அணி விளையாடிய 11 போட்டிகளில், 7 வெற்றிகளும், 4 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன. ஒரு போட்டியில்கூட தோல்வியடையவில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றிகளும், 4 தோல்விகளும், 1 போட்டி டிராவிலும் முடிந்துள்ளன. ஓமனுடனான பயிற்சி ஆட்டத்துக்கு முந்தைய மூன்று போட்டிகளிலும், இந்திய அணி சுமாராகவே விளையாடியது. 

இதற்கு முன், 2018 ஃபிஃபா தகுதிச்சுற்றுப்போட்டியில் இந்திய - ஓமன் அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும், ஓமன் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கும் இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், இந்தப் பயிற்சி ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஃபிஃபா தரவரிசையில் 97-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 82-வது இடத்தில் இருக்கும் ஓமன் அணியைச் சிறப்பான தடுப்பாட்டம் கொண்டு சமாளித்தது. போட்டி தொடங்கிய 7-வது நிமிடத்தில், ஓமனின் கோல் முயற்சியை அபாரமாகத் தடுத்தார் இந்திய கோல் கீப்பர் குருப்ரீத் சிங். ஓமனின் அட்டாக்கிங்கை சமாளிப்பதில் குறியாக இருந்த இந்திய அணிக்கு, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. 17-வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி அடிந்த பந்து கோல்போஸ்டுக்கு வெளியே சென்று மிஸ்ஸானது. 

42-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் கார்னர் வாய்ப்பில், சென்னையின் எஃப்.சி வீரர் அனிருத் தபா கோல் அடிக்கவில்லை. இந்திய அணி கோல் அடிக்கவில்லை என்றாலும், கோல் கீப்பர் குருப்ரீத் சிங்கின் சிறப்பான ஆட்டத்தில், ஓமனின் கோல் முயற்சிகளும் தடுக்கப்பட்டன. முதல் பாதி, இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் 0-0 என முடிவடைந்தது. 

முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும் தொடர்ந்தது. அட்டாக்கிங் மட்டுமில்லாது, இந்திய அணியினரின் கோல் அடிக்கும் வாய்ப்புகளையும் தொடர்ந்து தடுத்து வந்தது ஓமன் அணி. கடைசி 45 நிமிடங்களுக்கு, இந்திய கோல் கீப்பராக அம்ரிந்தர் சிங் களமிறங்கினார். முதல் பாதியில் குருப்ரீத் சிங் செய்த பணியை, இரண்டாம் பாதியில் அம்ரிந்தர் சிங் கச்சிதமாக செய்தார். இரு அணிகளின் சிறப்பான தடுப்பாட்டத்தினால், கோல் ஏதுமின்றி போட்டி டிராவில் முடிந்தது.

பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், ஆசிய கோப்பை க்ரூப் சுற்றுக்குத் தயாராகி வருகிறது இந்திய அணி. ஜனவரி 6-ம் தேதி நடக்கும் குரூப் போட்டியில், இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான 23 வீரர்கள் கொண்ட அணி விவரம் நேற்று வெளியானது. 

அணி விவரம்: சுனில் சேத்ரி(கேப்டன்), ஜெஜெ, பல்வந்த் சிங், சுமீத் பஸ்ஸி, உதாந்தா சிங், ஜாக்கிசன் சிங், ஜெர்மன்ப்ரீத் சிங், ப்ரனாய் ஹால்டர், அனிருத் தபா, வினித் ராய், ரெளலின் போர்கஸ், ஹலிஷரன் நசாரி, ஆஷிக் குருனியினன், ப்ரீத்தம் கோதல், சர்தாக் குலூயி, சந்தேஷ் சிங்கன், அனாஸ், சலாம் ரஞ்சன் சிங், நாராயண தாஸ், சுபாஷிஷ் போஸ், குருப்ரீத் சிங், அம்ரிந்தர் சிங், விஷால் கெய்த்.