வெளியிடப்பட்ட நேரம்: 08:08 (30/12/2018)

கடைசி தொடர்பு:11:14 (30/12/2018)

டெஸ்ட் வரலாற்றில் 150வது வெற்றி! - மெல்போர்னில் சாதித்த இந்திய அணி

மெல்போர்ன் மைதானத்தை நடைபெற்ற 3 -வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது. விக்கெட்டுகளை இழக்காமல், பொறுமையாக ரன்கள் சேர்த்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

பும்ரா

அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பும்ரா புயலில் சிக்கி, 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன் பின்னர் 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் முதல் ஆடுகளம் பந்துவீச்சு அதிகமாக ஒத்துழைக்க, ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் மிரட்டினார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 

கம்மின்ஸ்

இதன் மூலம் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களுடன் திணறியது. ஆனால், கம்மின்ஸ் தொடர்ந்து போராடினார், அவரது போராட்டத்தினால் 4 -ம் நாளின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி  8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள்ன் எடுத்தது. அப்போது கம்மின்ஸ் 61 ரன்களுடன் களத்தில் இருந்தார்.. 

இந்நிலையில் வெற்றிக்கு இன்னும் 141 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியும், 2 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் இந்திய அணியும் 5 -வது நாளில் களமிறங்கினர். மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படவே, இந்திய அணியின் வெற்றியும் தள்ளிப்போனது. ஒருவழியாக மழை நின்றது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 3 ரன்கள் சேர்ப்பதற்குள் கடைசி 2 விக்கெட்டுகளையும் இழந்தது. கம்மின்ஸ் 63 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்துவீச்சிலும், நாதன் லயான் 7 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி, 89.3 ஓவர்களில் 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 4 போட்டிகள்கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சர்வதேச டெஸ்ட் போட்டி வரலாற்றில் இந்திய அணி  பதிவு செய்த 150வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். அதேபோல், ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 7வது டெஸ்ட் போட்டி வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.