வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (30/12/2018)

கடைசி தொடர்பு:11:58 (30/12/2018)

`88 ஆண்டுகளில் முதல்முறை!’ - 423 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய நியூஸிலாந்து

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 423 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நியூஸிலாந்து வீரர்கள்

Photo: ICC

நியூஸிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 178 ரன்களும் இலங்கை அணி 104 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 660 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்ந்திருந்தது. தில்ரூவன் பெரேரா 22 ரன்களுடனும் லக்மல் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நியூஸிலாந்து வீரர்கள்

Photo: ICC

கடைசி நாளான இன்று வெற்றிபெற 423 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி களமிறங்கியது. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி தோல்வியிலிருந்து இலங்கை அணியைக் கரைசேர்த்த ஏஞ்சலோ மேத்யூஸ், காயம் காரணமாக ரிடையர்ட் ஆகியிருந்தார். இந்தநிலையில், போட்டி தொடங்கிய 12 நிமிடங்களிலேயே இலங்கை அணியின் எஞ்சியிருந்த 3 விக்கெட்டுகளையும் நியூஸிலாந்து வீரர்கள் வீழ்த்தினர். லக்மல் 18 ரன்களிலும் பெரேரா 22 ரன்களிலும் வெளியேறினர். 106.2 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 236 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கவில்லை. இதன்மூலம் 423 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த நியூஸிலாந்து அணி, தொடரையும் 1-0 என்ற கணக்கில் வென்றது. முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்ததுடன் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய டிம் சவுத்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

நியூஸிலாந்து வீரர் டிம் சவுத்தி

Photo: ICC

இலங்கை அணிக்கெதிரான தொடரை வென்றதன்மூலம் நியூஸிலாந்து அணி, தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களை நியூஸிலாந்து அணி வெல்வது, அந்த அணியின் 88 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். அந்த அணி ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தது. ரன்களைக் கணக்கில் கொண்டால் நியூஸிலாந்து பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவே. அதேபோல், உலக அளவில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணிகள் பட்டியலில் 8வது இடத்தை நியூஸிலாந்து அணி பிடித்தது.