வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (31/12/2018)

கடைசி தொடர்பு:15:45 (31/12/2018)

தேவதை வரவு! - அவசரமாக மும்பை திரும்பிய ரோஹித் சர்மா

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு தொடர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போதுவரை 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இறுதி மற்றும் நான்காவது போட்டி ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் பேட்ஸ் மேன் ரோகித் சர்மா நான்காவது போட்டியில் கலந்துகொள்ளாமல் அவசரமாக ஆஸ்திரேலியாவிலிருந்து மும்பைக்குப் பறந்துள்ளார்.

ரோஹித் ஷர்மா

ரோஹித் சர்மா அப்பா ஆகிவிட்டார் அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல்தான் அவரின் அவசரத்துக்குக் காரணம்.  ரோஹித் சர்மா- ரித்திகா தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரித்திகா சமூகவலைதளங்களில் செம்ம ஹிட்.  கடந்த வருடம் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த இரட்டை சதத்தையும் அவர் தன் திருமண நாளன்று, மனைவி ரித்திகா சஜ்தேக்கு தன் சாதனையை டெடிகேட் செய்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரித்திகாவை வீட்டில் விட்டுவிட்டுத்தான் ரோஹித் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்றிருந்தார். இதற்கிடையில் அவருக்குக் குழந்தை பிறந்த தகவல் கிடைத்ததும் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரில் முன்னிலை மற்றும் குழந்தை பிறந்த இரட்டை சந்தோசத்தில் உள்ளார் ரோஹித் சர்மா. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு மகிழ்ச்சியில் வரவுள்ள புது ஆண்டில் அடியெடுத்துவைக்கவுள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பி.சி.சி.ஐ, “ரோஹித் சர்மா ஜனவரி 8-ம் தேதி நடக்கும் ஒரு நாள் போட்டியில் கலந்துகொள்வார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள காரணத்தால் டிசம்பர் 30-ம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து மும்பை சென்றுள்ளார். தன் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ள அவருக்கு பி.சி.சி.ஐ சார்பாக வாழ்த்துகள்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.