ஸ்மிரிதி, பூனம், ஹர்மன்ப்ரீத்... ஐ.சி.சி அணியில் 3 இந்திய வீராங்கனைகள்! | ICC announces women t20, ODI teams for the year

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (31/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (31/12/2018)

ஸ்மிரிதி, பூனம், ஹர்மன்ப்ரீத்... ஐ.சி.சி அணியில் 3 இந்திய வீராங்கனைகள்!

ஐ.சி.சி விருது பெறும் இரண்டாவது இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா...

ஸ்மிரிதி, பூனம், ஹர்மன்ப்ரீத்... ஐ.சி.சி அணியில் 3 இந்திய வீராங்கனைகள்!

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளின் கீழ் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. 2018-ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைத் தேர்வு செய்து, டி-20, ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகளையும் விருதுகளையும் அறிவித்துள்ளது. ஐ.சி.சி வெளியிட்டுள்ள அணிப்பட்டியலில், மூன்று இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 

கிரிக்கெட்டைக் கொண்டாடும் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கல்ல. 2017 ஐ.சி.சி மகளிருக்கான உலகக்கோப்பை இறுதி போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மகளிர் இந்திய அணிக்கான ஃபாலோவர்ஸ் அதிகரித்தனர். ரசிகர்களின் ஆதரவு 2018 டி-20 உலகக்கோப்பை வரை தொடர்ந்தது, இனியும் தொடர்கிறது. ரசிகர்களால் கொண்டாடப்படும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.சி.சி-யின் 2018-ம் ஆண்டுக்கான மகளிர் டி-20 அணியின் கேப்டனாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓப்பனர் ஸ்மிரிதி மந்தானா, சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோர் டி-20, ஒரு நாள் என இரண்டு அணிகளுக்கும் தேர்வாகியுள்ளனர். 

ஐசிசி அணிப்பட்டியலில் ஸ்மிரிதி - பூனம் - கவுர்


கடந்து ஆண்டு வெளியான ஐ.சி.சி மகளிருக்கான டி-20 அணியில் இடம் பெற்றிருந்த கவுர், இந்த ஆண்டு கேப்டனாக முன்னேறியுள்ளார். டி-20 பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அவர், இந்த ஆண்டு 25 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  663 ரன்களும் ஸ்ட்ரைக் ரேட் 126.2 கொண்டுள்ளார். 2018 மகளிருக்கான டி-20 சாம்பியன்ஷிப்பில், கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதி வரை முன்னேறியது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளிலும் அதிரடி வெற்றிகளைக் குவித்தது. இந்திய அணியின் சிறப்பான முன்னேற்றம், டி-20 தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து முன்னேறி வரும் மகளிர் இந்திய அணி, பல சாதனைகளைச் செய்யக் காத்திருக்கிறது.  

டி-20 அணி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து கவுர் பேசுகையில், “உண்மையில் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. டி-20 கிரிக்கெட்டிலும் நாங்கள் சிறப்பாக விளையாட முடியும் என அணி வீராங்கனைகள் நம்பிக்கை வைத்தனர். இந்த வெற்றிக்கு அணி வீராங்கனைகளின் பங்கு மிக முக்கியக் காரணம்” என்றார். 

2018 டி-20 போட்டிகளுக்கான அணி விவரம்:

1. ஸ்மிரிதி மந்தானா (இந்தியா), 2. அலீசா ஹீலி (விக்கெட் கீப்பர்) (ஆஸ்திரேலியா), 3. சூசி பேட்ஸ் (நியூசிலாந்து), 4. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்) (இந்தியா), 5. நடாலி ஷிவர் (இங்கிலாந்து), 6. எல்லீஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), 7. ஆஷ்லே கார்டர் (ஆஸ்திரேலியா), 8. லே காஸ்பெரக் (நியூசிலாந்து), 9. மேகன் ஸ்கட் (ஆஸ்திரேலியா), 10. ருமானா அஹமத் (வங்கதேசம்), 11. பூனம் யாதவ் (பூனம் யாதவ்).


2018 ஒரு நாள் போட்டிகளுக்கான அணி விவரம்
1. ஸ்மிரிதி மந்தானா (இந்தியா), 2. மேமி பெர்மவுண்ட் (இங்கிலாந்து), சூசி பேட்ஸ் (கேப்டன்) (நியூசிலாந்து), 4. டேன் வான் நெய்க்ரக் (தென்னாப்பிரிக்கா),  5. சோஃபி டிவைன் (நியூசிலாந்து), 6. அலீசா ஹீலி (விக்கெட் கீப்பர்) (ஆஸ்திரேலியா),  7.மரிசனே கேப் (தென்னாப்பிரிக்கா),  8.தீயேந்திரா டாட்டின் (வெஸ்ட் இண்டீஸ்), 9. சனா மிர் (பாகிஸ்தான்), 10. சோஃபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), 11. பூனம் யாதவ் (இந்தியா).

டி-20, ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகளைத் தேர்வு செய்த ஐ.சி.சி தேர்வுக்குழு, 2018-ம் ஆண்டுக்கான விருதுகளையும் அறிவித்துள்ளது. இம்முறை, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா இரண்டு விருதுகளை அள்ளியுள்ளார். 

2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை - ஸ்மிரிதி மந்தானா.
2018-ம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் போட்டிகளுக்கான வீராங்கனை - ஸ்மிரிதி மந்தானா. 
2018-ம் ஆண்டுக்கான சிறந்த டி-20 வீராங்கனை - அலீசா ஹீலி  (ஆஸ்திரேலியா).
2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீராங்கனை - சோஃபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து).

ஐ.சி.சி விருது பெறும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிரிதி பெற்றுள்ளார். இதற்கு முன், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 2007-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதைப் பெற்றதே சாதனையாக இருந்தது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வீராங்கனை ஒருவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். ஜனவரி 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான காலகட்டத்தில், 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மிரிதி 669 ரன்களும், சராசரி 66.90 கொண்டுள்ளார். அதே போல, 25 டி-20 போட்டிகளில் 622 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 132.67 வைத்துள்ளார். 2018 மகளிருக்கான கிரிக்கெட் சூப்பர் லீக் தொடரில் ’வெஸ்டர்ன் ஸ்ட்ராம்’ அணிக்காக விளையாடி வரும் ஸ்மிரிதி மந்தானா, லீடிங் ரன் ஸ்கோரராகத் தொடரை முடித்துள்ளார்.