வெளியிடப்பட்ட நேரம்: 22:09 (02/01/2019)

கடைசி தொடர்பு:22:12 (02/01/2019)

``அன்று 6-வது இடமோ 7-ம் இடமோ..? இன்று நம்பர் 1” - கோலியின் கேப்டன்ஷிப் கருத்தால் சர்ச்சை

முன்னாள் கேப்டன் தோனி என்னிடம் கேப்டன்ஷிப்பை கொடுக்கும் இந்திய அணி 7வது இடம் இருந்தது. ஆனால், இன்று அது மாறியுள்ளது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

விராட் கோலி - தோனி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ஏற்கெனவே இந்திய அணி இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது வெற்றியைப் பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தொடரை டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கோடு ஆஸ்திரேலிய வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சிட்னி டெஸ்ட் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் இந்திய கேப்டன் விராட் கோலி. 

கோலி

photo credit: @BCCI

அப்போது, ``மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளேன். அதனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்கு அறிவேன். சில போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளோம். ஆனால், ஓர் அணியாகத் தொடரை வெல்வது என்பது பெரும் சவாலாகவே இருந்து வந்துள்ளது. இதைத் தீர்க்கவே போராடி வருகிறோம். தற்போது இந்தத் தொடரை வென்றால் அது மிகப்பெரிய சாதனை. எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அணிக்குமே இது சிறந்த வெற்றி ஆகும். ஏனெனில், இங்குதான் உண்மையான அணி மாற்றத்துக்கான காலகட்டம் தொடங்கியது. 

கோலி

photo credit: @BCCI

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே சிட்னி மைதானத்தில் வைத்துதான் தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இளம் வீரர்கள் நிறைந்த அணியாக அப்போது நாம் தரவரிசையில் 6 வது இடமோ, 7 வது இடமோ இருந்தோம். ஆனால், இன்று உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறோம். இதை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். நாளை தொடங்கும் சிட்னி போட்டியை ஒரு தனித்துவம் வாய்ந்த போட்டியாகவே பார்க்கிறோம். முழு முயற்சியையும் காட்டி தீவிரமாகச் செயல்படுவோம். 2018-ம் ஆண்டு இந்திய அணிக்கு நன்றாகவே அமைந்தது. 2019-ம் ஆண்டின் தொடக்கத்தையும் அவ்வாறே கொண்டு செல்ல விரும்புகிறோம். 

கோலி

photo credit: @BCCI

என்னுடைய தனிப்பட்ட சாதனைகளைப் பேசுகிறீர்கள். உண்மையைக் கூற வேண்டும் என்றால் கடந்த இரண்டு தொடர்களாகத் தனிப்பட்ட சாதனைகளை நான் கண்டுகொள்வதில்லை. தனிப்பட்ட சாதனைகள் நம் பெயரின் பின்னால் சேரும். ஆனால், ஓர் அணியாக வெற்றிபெறவில்லை எனில், தனிப்பட்ட சாதனைகள் குறித்து பேசி பிரயோஜனம் இல்லை. வரலாறுகள் பற்றி பிரச்னையில்லை. தற்போது இருக்கும் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்றே நான் சிந்திப்பேன்.

கோலி  

photo credit: @BCCI

அதுவே முக்கியம். கடந்த காலங்களில் செய்ய முடியாததைச் செய்ய வேண்டும் என்பதற்காக விளையாடவில்லை. இந்தியா சார்பில் யார் வந்து ஆடினாலும் வெற்றி பெற வேண்டும் என்றே இதுவரை எண்ணியிருக்கிறோம். மெல்போர்ன், அடிலெய்ட் டெஸ்ட் போன்ற வெற்றிகள்தான் அணியின் நம்பிக்கையைத் திடப்படுத்தும். அணியாகச் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்ற உணர்வைக் கொடுக்கும்" என்றார்.

கோலி இவ்வாறு பேசியதை தோனி ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் கேப்டனாக இருக்கும்போது இந்திய அணி ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. கங்குலி, தோனி, டிராவிட் என அனைவரது கேப்டன்ஷிப்பிலும் இந்தியா ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. அப்படி இருக்கையில் விராட் கோலியின் தன் தலைமையின் கீழ்தான் இந்திய அணி சாதித்து வருகிறது என்ற ரீதியில் பேசியுள்ளது தோனியின் கேப்டன்ஷிப்பை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க