வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (03/01/2019)

கடைசி தொடர்பு:13:05 (03/01/2019)

மூன்று செஷனிலும் இந்திய அணியின் ஆதிக்கம் - சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா திணறல் #AusvInd

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

புஜாரா

Photo: Twitter/BCCI

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் இந்தப் போட்டியிலும் சொதப்பினார். 9 ரன்களுக்கு 2 -வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். இதனால் புஜாரா மீண்டும் தொடக்கத்திலே களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் பொறுமையாக பார்ட்னர்ஷிப் அமைக்கும் பணிகளில் புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஈடுபட்டனர். 

புஜாரா அகர்வால்

நேர்த்தியாக விளையாடிய இந்த ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. அப்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த மயங்க் அகர்வால், 77 ரன்னில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னரும் புஜாரா தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவரது விக்கெட்டை வீழ்த்த முடியாமல், ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். பொறுமையாக விளையாடிய புஜாரா அவ்வப்போது மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பவும் தயங்கவில்லை. இதனால் அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் ஏறியது.

கோலி

இந்த நிலையில், பொறுமையாக கம்பெனி கொடுத்து வந்த கோலி 23 ரன்னில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவுக்குச் சற்று நம்பிக்கை பிறந்தது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த துணைக் கேப்டன் ரஹானே 18 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் புஜாரா ஒருபுறம் நிதானம் காட்டி சதத்தை நெருங்கினார்.

புஜாரா

ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயனை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் திணறி வந்த நிலையில், லயனை இப்படிதான் எதிர்கொள்ள வேண்டும் என்பதுபோல் இருந்தது அவரது ஆட்டம். இறுதியாக ஸ்டார்க் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டியில் தனது 18 -வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தத் தொடரில் புஜாரா அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.

5 -வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹனும விஹாரி புஜாராவுக்கு சிறப்பாக கம்பெனி கொடுத்தார். இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். முதலாம் நாளின் இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. புஜாரா 130 ரன்களுடனும் விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாவது ஓவரில் களமிறங்கிய புஜாரா முதல் நாளின் இறுதி வரை ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு தண்ணிக் காட்டினார்.  ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

இந்தத் தொடரில் புஜாரா இதுவரை 7 இன்னிங்ஸில் விளையாடி 458 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். கோலி 282 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தத் தொடரில் கோலி கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில், புஜாரா அனைவரது மனங்களையும் வென்று வருகிறார். இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் மூன்று செஷனிலும் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.