``கிரிக்கெட்டில் ஏ பி சி டி கற்றுக்கொடுத்தவர்!”- ஆசானின் உடலை சுமந்து சென்ற சச்சின் | sachin pays last respect to his teacher

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (03/01/2019)

கடைசி தொடர்பு:14:45 (03/01/2019)

``கிரிக்கெட்டில் ஏ பி சி டி கற்றுக்கொடுத்தவர்!”- ஆசானின் உடலை சுமந்து சென்ற சச்சின்

சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பக் கால கிரிக்கெட் பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேகர் நேற்று காலமானார். இன்று சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செய்து அவரது உடலை சுமந்து சென்றார்.

சச்சின்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல்வேறு உச்சங்களைத் தொட்டவர். இவர், பல்வேறு சாதனைகளைப் புரிவதற்கு முக்கியக் காரணம், அவரின் இளம்வயது பயிற்சியாளர் அச்ரேகர். சிறுவயது சச்சினுக்கு அச்ரேகர் அளித்த பயிற்சிதான், அவர் பல்வேறு உச்சங்களைத் தொட காரணமாக அமைந்தது. முதலில் பந்துவீச்சில்தான் சச்சினுக்கு கவனம் இருந்ததாம். ஆனால், ரமாகாந்த் அச்ரேகர், நீ பேட்டிங்கில் கவனம் செலுத்து என சச்சினை வழிநடத்தி இருக்கிறார். இப்படிப்பட்ட சச்சினின் ஆசான்  ரமாகாந்த் அச்ரேகர், உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. 

ரமாகாந்த் அச்ரேகர்

சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யார் விருதை 1990-ம் ஆண்டு பெற்றார், அச்ரேகர். இதேபோல, பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். சச்சின் மட்டுமல்லாமல், வினோத் காம்ப்ளி, பிரவின் அம்ரே, சமீர் டிகே மற்றும் பால்விந்தர் சிங் சந்து போன்ற சிறந்த வீரர்களையும் உருவாக்கியுள்ளார். இத்தனை ஆண்டு காலமாக என்ன பணி இருந்தாலும், சச்சின் அனைத்து வருடமும்  அச்ரேகரை சந்தித்துப் பேசி வருவார். 

அவர் தனது இரங்கல் செய்தியில், ``அச்ரேகர் செல்வதால், இனி சொர்க்கத்திலும் கிரிக்கெட் வளம் பெறும். அவரது மற்ற மாணவர்கள் போல், நானும் கிரிக்கெட்டின் ஏ பி சி டி அவரிடம்தான் கற்றேன். அவர் எனது வாழ்க்கைக்கு வழங்கியதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இன்று நான் நிற்கும் இடத்துக்கு அவர்தான் அடித்தளம் இட்டவர். 

இறுது சடங்கு

Photo Credit: Sachinist.com

கடந்த மாதம் மற்ற சில மாணவர்களுடன் அவரைச் சந்தித்துப் பேசினேன். பழைய நினைவுகளைப் பகிர்ந்து சிரித்து மகிழ்ந்தோம். அவர் நேர்மையாக விளையாட மட்டுமல்ல, நேர்மையாக வாழவும் கற்றுக்கொடுத்தார். உங்கள் வாழ்க்கையில் எங்களையும் இணைத்துக்கொண்டது நன்றி சார். சிறப்பாக விளையாடினீர்கள் சார். நீங்கள் எங்கு இருந்தாலும், அங்கும் சிறந்த பயிற்சியாளராக இருப்பீர்கள்” என் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

இன்று ரமாகாந்த் அச்ரேகரின் இல்லத்துக்கு வந்த சச்சின், அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.