வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (03/01/2019)

கடைசி தொடர்பு:17:15 (03/01/2019)

சிட்னி டெஸ்ட்டில் பிங்க் நிறத்தில் கோலி! - பின்னணி இதுதான்

விராட் கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் புஜாராவின் அதிரடி சதத்தால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும் விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஹேண்ட் க்ளவுஸ், பேட் க்ரிப், ஸ்டிக்கர் ஆகியவை பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. இந்தப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஸ்டெம்புகளும் பிங்க் நிறத்திலே இருந்தது. இதற்கு ஒரு காரணம் உண்டு. 

புத்தாண்டு பிறந்ததும் ஆண்டின் முதல் வாரத்தில் சிட்னி நகரில் நடத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘பிங்க் டெஸ்ட்’என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியின்போது ஆஸ்திரேலியா வீரர்கள் பிங்க் நிற தொப்பியை அணிவார்கள். ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத்தின் கேன்சர் மையத்துக்கு நிதியுதவி அளிக்கும் பொருட்டு இவ்வாறு செய்கின்றனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மெக்ராத்தின் மனைவி ஜேன் மார்பக மற்றும் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு, அவர் கடந்த 2008-ம் ஆண்டு தனது 42-வது வயதில் மரணமடைந்தார். இதையடுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘மெக்ராத் பவுண்டேஷனை’ 2009-ம் ஆண்டு தொடங்கினார். புத்தாண்டின் முதல் வாரத்தில் சிட்னி நகரில் நடத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிங்க் டெஸ்ட் ஆனது. ரசிகர்கள் இந்தப் போட்டியின்போது பிங்க் நிற உடை அணிந்து வருவார்கள். தங்களால் முடிந்த நிதியை அவர்கள் அளிப்பார்கள். இந்தப் போட்டியின்போது திரட்டப்படும் நிதியானது மெக்ராத் கேன்சர் நிறுவனத்துக்கு அளிக்கப்படுகிறது.

கிரிக்கெட்

‘பிங்க் டெஸ்ட்’ ஆதரவளிக்கும் பொருட்டு இந்தியக் கேப்டன் விராட் கோலி பிங்க் நிற ஹேண்ட் க்ளவுஸ், பேட் க்ரிப், ஸ்டிக்கர் ஆகியவற்றுடன் களமிறங்கினார். கோலியின் படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.  விராட் கோலியின் இந்த பண்புக்கு நான் தலைவணங்குகிறேன். ‘பிங்க் டெஸ்ட்’போட்டிக்கு அவர் அளித்த ஆதரவு அவர் மீதான மதிப்பை கூட்டுகிறது என ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.