வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (04/01/2019)

கடைசி தொடர்பு:08:42 (04/01/2019)

டிராவிட்டை விஞ்சிய புஜாரா - ஆஸ்திரேலிய மண்ணில் புதிய சாதனை! #AusvInd

சிட்னியில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் புஜாரா இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் அவர், ராகுல் டிராவிட்டின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். 

புஜாரா

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து இருந்தது. சதமடித்த புஜாரா களத்தில் இருந்தார். 

புஜாரா

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. பொறுமையாக விளையாடிய ஹனும விஹாரி 42 ரன்னில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் புஜாராவுடன் பன்ட் இணைந்தார். பன்ட் சிறப்பாக கம்பெனி கொடுக்க, புஜாரா 150 ரன்களைக் கடந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சோதித்தார். 

நேற்றைய மூன்று செஷனிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது போலவே, இன்றைய முதல் செஷனிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோரும் நல்ல ரன்ரேட்டுடன் முன்னேறியது. 

பன்ட்

ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த புஜாரா, இந்தப் போட்டியில் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விக்கெட்டுகளுக்கான வாய்ப்பளிக்காமல் விளையாடினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை அடிக்கடி மாற்றியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
 

புஜா

ஆஸ்திரேலியாவில் புஜாராவின் ஆட்டம், இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது எனப் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் டிராவிட்டின் சாதனை ஒன்றையும் முறியடித்திருக்கிறார் புஜாரா. ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக பந்துகள் சந்தித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் புஜாரா. முன்னதாக 2003/04 -ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் டிராவிட் 1,203 பந்துகள் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புஜாரா

தொடந்து சிறப்பாக விளையாடிய புஜாரா, இந்தத் தொடரின் முதலாவது இரட்டைச் சதத்தை அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க லயனின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள், இந்திய வீரர்கள் என அனைவரும் எழுந்து நின்று புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தத் தொடரில் மூன்று சதங்கள் அடித்துள்ள அவர், 521 ரன்களும் குவித்துள்ளார்.