ஆஸி -யில் இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்! - சிட்னியில் அசத்திய வீரர்கள் #AusvInd | India scores big in Sidney test match

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (04/01/2019)

கடைசி தொடர்பு:15:01 (04/01/2019)

ஆஸி -யில் இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்! - சிட்னியில் அசத்திய வீரர்கள் #AusvInd

புஜாராவின் நிதானம் மற்றும் பன்ட், ஜடேஜாவின் அதிரடியான ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி சிட்னியில் 622 ரன்கள் குவித்துள்ளது. 

பன்ட்

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி தற்போது வரை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

சதம்

இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புஜாரா 7 ரன்னில் தனது இரட்டைச் சதத்தைத் தவறவிட்டார். அவர் 193 ரன்னில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போதுதான் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் பெருமூச்சு விட்டனர். ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய ஜடேஜாவுடன் கூட்டணி வைத்த பன்ட், சிறப்பாக விளையாடினார். 

ஜடேஜா

வழக்கமான அதிரடியைக் கையில் எடுக்காத பன்ட், மிகவும் நேர்த்தியாக விளையாடினார். மோசமான பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரிக்கு தெறிக்கவிட்ட பன்ட், நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்து நேர்த்தியாக விளையாடினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவில் சதமடிக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்னும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது. 

புஜாரா

பன்ட் சதமடிக்க அதிரடியாக விளையாடிய ஜடேஜா அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியான ஆட்டத்தினால் இந்தியாவில் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சதத்துக்குப் பின் பன்ட் டாப் கியரில் விளையாடினார். ஜடேஜாவும் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடிக்க இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். 

ஜடேஜா

பன்ட் தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக 150 ரன்கள் எடுத்தார். 114 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த ஜடேஜா லயன் பந்துவீச்சில் போல்டு. ஆனால் அடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்ய முடிவு செய்தது. அப்போது பன்ட் 159 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். 

டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் ஒரு  இன்னிங்ஸில் ஓர் அணி 596 ரன்களுக்கு மேல் எடுத்து அந்த அணி தோல்வியடைந்தது கிடையாது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடினாலும், இந்தப் போட்டி டிராவை நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல இது நல்ல வாய்ப்பு என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

சிட்னி டெஸ்ட்டின் இரண்டாவது நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.