வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (04/01/2019)

கடைசி தொடர்பு:17:15 (04/01/2019)

`டிம் பெய்ன் பேசுகிறேன்!’ - செய்தியாளர் சந்திப்பின் நடுவே செல்போன் அழைப்புக்குப் பதில் சொன்ன ஆஸி. கேப்டன்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் செய்தியாளர்களிடம் பேசினார். 

டிம் பெய்ன்

Photo Credit: Cricket.com.au

சிட்னியில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் புஜாரா 193 ரன்களும், ரிஷப் பன்ட் ஆட்டமிழக்காமல் 159 ரன்களும் எடுத்தனர். குறிப்பாக, 7-வது விக்கெட்டுக்கு பன்ட் - ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது. இதையடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 19 ரன்களுடனும் உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 

புஜாரா

Photo Credit: BCCI

இரண்டாம் நாள் ஆட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சாதித்தது மற்றும் இலக்கு ஆகியவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, டிம் பெய்ன் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது பேட்டியை ஒலிப்பதிவு செய்வதற்காகப் பத்திரிகையாளர் ஒருவர் மேசை மீது வைத்திருந்த செல்போன் ஒலித்தது. செய்தியாளர் சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது செல்போன் ஒலித்ததால், `அது யாருடைய செல்போன்?’ என்று கூறிக்கொண்டே செல்போனை டிம் பெய்ன் எடுத்தார். 

ரிஷப் பன்ட் - ஜடேஜா

Photo Credit: BCCI

அந்த அழைப்புக்குப் பதில் கூறிய டிம் பெய்ன், குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளர், தற்போது செய்தியாளர் சந்திப்பில் இருப்பதாகவும், அவரை சிறிதுநேரம் கழித்து அழைக்கும்படி கூறுவதாகவும் பெய்ன் பதிலளித்தார். இது, செய்தியாளர் சந்திப்புக்காக அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடையே  கலகலப்பை ஏற்படுத்தியது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். 

டிம் பெய்ன் கூறுகையில், `ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஒவ்வொரு முறையும் களத்தில் இறங்கும்போதும் வெற்றிபெறவே விரும்புகிறோம். அதேபோல், டெஸ்ட் தர வரிசையிலும் முன்னேறவே விரும்புகிறோம். ரசிகர்களிடம் இருந்து நம்பிக்கையையும் மரியாதையையும் ரசிகர்களிடமிருந்து மீண்டும் பெறுவதைச் சுற்றியே எங்களின் இலக்குகள் இருக்கின்றன’ என்றார். மேலும் அவர் கூறுகையில், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் பாராட்டினார். 
இந்தத் தொடர் முழுவதும் தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருந்த டிம் பெய்ன், மெல்போர்ன் டெஸ்டில் இந்திய வீரர் ரிஷப் பன்ட்-டிடம் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. தனது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது குறித்து டிம் பெய்ன் பேசியிருந்த நிலையில், அந்தப் போட்டிக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரை பன்ட் சந்தித்தது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.