வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (04/01/2019)

கடைசி தொடர்பு:20:02 (04/01/2019)

`எண்ணங்களை வெளிப்படுத்த வார்த்தையில்லை!’ - ரிஷப் பன்ட் உருக்கம்

ரிஷப் பண்ட்

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பன்ட், 159 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, விக்கெட் கீப்பர் தேர்வு இந்திய அணிக்குத் தலைவலியாக இருந்தது. பார்த்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், சாஹா, ரிஷப் பன்ட் ஆகியோரை மாற்றி மாற்றிப் பயன்படுத்தி வந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்லெட்ஜிங் மன்னர்களான ஆஸ்திரேலியா வீரர்களையே களத்தில் கலாய்த்து தள்ளினார் ரிஷப். இதனால் ரசிகர்கள் மனதில் சட்டென இடம்பிடித்தார். நீங்கள்தான் வீரர்களை வம்புக்கு இழுத்தீர்கள் என ஆஸ்திரேலியா பிரதமரே கேட்டார் என்றால் பாருங்களேன். ரிஷப்பின் கடினமான உழைப்பும், அவரது அர்ப்பணிப்பும்தான் அவரை இந்திய அணிக்குத் தேர்வு செய்ய உதவியுள்ளது. 

கிரிக்கெட்


இந்தக் கடினமான காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்த தன் தாய் குறித்து சமூகவலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரிஷப் பன்ட் தாயாருக்கு இன்று பிறந்தநாள். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா, எப்போதும் எனக்குப் பின்னால் இருந்து ஊக்கப்படுத்துவது நீங்கள்தான். உங்களை மிகவும் நேசிக்கிறேன். நான் போட்டிகளில் விளையாடும் போதும் பயிற்சிக்குச் செல்லும்போதும் நீங்கள் என்னுடன் பயணம் செய்ததை இப்போதும் நினைத்துப்பார்க்கிறேன். எனக்காக நீங்கள் சுமந்த கடுமையான வலிகளுக்கு நன்றி. என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த எனக்கு வார்த்தையில்லை. உங்களை மிகவும் நேசிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.