`ஹாலிடே அவசியம் பாஸ்!’ - விராட் கோலிக்கு கே.எல்.ராகுல் அட்வைஸ் | KL Rahul's advice for Virat kohli

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:19:00 (05/01/2019)

`ஹாலிடே அவசியம் பாஸ்!’ - விராட் கோலிக்கு கே.எல்.ராகுல் அட்வைஸ்

'விராட் கோலி, கிரிக்கெட்டில் இருந்து சிறிய விடுமுறை எடுத்துக்கொள்வது நல்லது' என இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்திருக்கிறார். 

விராட் கோலி - கே.எல்.ராகுல்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. டி20 தொடர் முடிவடைந்த நிலையில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துவிட்டன. முதல் போட்டியிலும், மூன்றாவது போட்டியிலும் வென்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்திருக்கிறது. இது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 386 ரன்கள் குறைவாகும். 

இந்திய அணி வீரர்கள்

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில், விராட் கோலி குறித்து பேசிய கே.எல்.ராகுல், `என்னைப் பொறுத்தவரை விராட் கோலி கொஞ்சம் அமைதியாக வேண்டும். நான் அவரிடம் அடிக்கடி சொல்வதுண்டு, அவர் விடுமுறை மோடுக்குச் சென்றதே இல்லை. விராட் எப்பொழுதும் வேலை வேலை வேலை என்ற மோடிலேயே இருக்கிறார். இதையே அவர் விரும்புகிறார்’ என்றார்.

விராட் கோலி, கே.எல்.ராகுல், பாண்ட்யா

ஃபிட்னெஸ் குறித்த அறிவுரையை யாரிடம் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு, விராட் கோலியின் பெயரை பாண்ட்யா பதிலாகக் குறிப்பிட்டார். அதேபோல, அதிகமாகக் கலாய்ப்பது (Prankstar) யார் என்ற கேள்விக்கும் அவர் விராட் கோலியின் பெயரையே  குறிப்பிட்டார். சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு, பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருமே முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி என்றே பதிலளித்தனர்.