வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (06/01/2019)

கடைசி தொடர்பு:10:35 (06/01/2019)

`அவர் இன்னொரு கில்கிறிஸ்ட்' - ரிஷப் பன்ட்டை புகழும் ரிக்கி பாண்டிங்!

ரிஷப் பன்ட் தோனியை விட அதிக சதங்கள் விளாசுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பன்ட்

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி தற்போது வரை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடினார். வழக்கம் போல் அதிரடியாக விளையாடாமல், மிகவும் நேர்த்தியாக விளையாடிய அவர் 189 பந்துகளைச் சந்தித்து 159 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அவர் தனது டெஸ்ட் கேரியரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். 

ரிஷப் பன்ட்

அதேநேரம் ஆஸ்திரேலியாவில் சதமடிக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்னும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையே, சதம் அடித்த ரிஷப் பன்ட் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``இந்திய கிரிக்கெட்டில் தோனியின் தாக்கம் இருக்கிறது. நாம் எப்போதும் அவரின் தாக்கத்தை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். தோனி நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் குறைவான சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இதுவரை அவர் ஆறு சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 

ரிக்கி பாண்டிங்

ஆனால் ரிஷப் பன்ட் தோனியை விட அதிக சதங்களை அடிப்பார்.ரிஷப் ஏற்கனவே இரண்டு சதங்கள் எடுத்துவிட்டார். இரண்டு முறை 90 ரன்களை கடந்துள்ளார். 21 வயது தான் ஆகிறது. அதற்குள் 9வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறார். எதிர்காலத்தில் நிச்சயம் இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ரிஷப் விளையாடுவார்.  இதில் மாற்றுக்கருத்து இல்லை. பேட்டிங் குறித்த நுணுக்கமான அறிவைக் கற்றுக்கொண்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருக்கும் போது ரிஷப்புக்கு  பயிற்சி அளித்தவன் என்ற வகையில் கூறுகிறேன் கண்டிப்பாக ஒரு நல்ல பேட்ஸ்மானாக அவர் வருவார். ஆனால் கீப்பிங்கில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும். என்னைப் பொறுத்தவரை ரிஷப் பன்ட் இன்னொரு ஆடம் கில்கிறிஸ்ட்" என்று புகழ்ந்து பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க