வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (06/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (06/01/2019)

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 7வது டெஸ்ட் தொடர் வெற்றி! - அசத்திய தென்னாப்பிரிக்கா

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது. 

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்

Photo Credit: Twitter/@OfficialCSA

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 177 ரன்களும் தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 41 ரன்களை பாகிஸ்தான் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்ளசிஸ்

Photo Credit: Twitter/@OfficialCSA

தென்னாப்பிரிக்க அணியின் வழக்கமான தொடக்க வீரர் மார்க்ரம், காயம் காரணமாகக் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக டீன் எல்கருடன் தியோனிஸ் டி பிரைன் தொடக்க வீரராகக் களமிறங்கினார். 41 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை தென்னாப்பிரிக்க அணி 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டியது. எல்கர் 24 ரன்களுடனும் கேப்டன் டூப்ளசிஸ் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அப்பாஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும் வென்றிருந்த தென்னாப்பிரிக்க அணி, இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே கைப்பற்றியது. முதல் இன்னிங்ஸில் அசத்தல் சதமடித்த தென்னாப்பிரிக்கக் கேப்டன் டூப்ளசிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்க அணி பெறும் 7வது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் வரும் 11ம் தேதி தொடங்குகிறது.