வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (07/01/2019)

கடைசி தொடர்பு:14:15 (07/01/2019)

``63 ஏக்கர்; 1.10 லட்சம் ரசிகர்கள்” -உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் தீவிரம் #Gujrat

இந்தியர்களையும் கிரிக்கெட்டையும் அத்தனை எளிதாகப் பிரித்துவிட முடியாது. இந்தியாவில் மட்டும் கிரிக்கெட் தொடர்பாக எந்த முயற்சி எடுத்தாலும், அனைத்துமே வெற்றியில்தான் முடியும். உலகிலேயே அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் கொண்ட நாடு இந்தியாதான். நாடு முழுவதும் 52 சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. அடுத்த இடத்தில் இங்கிலாந்து உள்ளது. அங்கு, 23 சர்வதேச மைதானங்கள்தான். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள வித்தியாசம் மட்டுமே 29 மைதானங்கள். 

கிரிக்கெட் மைதானம்

Photo Credit: Twitter/@mpparimal

தற்போது, இந்த மைதானங்களுக்கெல்லாம் ராஜாவாக வருகிறது, புதிய மைதானம். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மெட்ரோ பகுதியில் கட்டப்பட்டுவருகிறது, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம். தற்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தைவிட இதில் அதிக அளவில் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். 

கட்டுமான பணிகள் தீவிரம்

Photo Credit: Twitter/@mpparimal

சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில், 2017-ம் ஆண்டு ஜனவரியில் இதன் பணிகள் தொடங்கியது. பிரபல கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனம், இந்த மைதானத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவர் பரிமல் நத்வானி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். 

அதன்பின்னர், இந்த மைதானம் தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். கட்டுமானப் பணிகள் தொடர்பாகப் பேசிய பரிமல்,  ``கட்டுமானப் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே, திட்டமிட்ட காலத்தில் பணிகள் நிறைவடைந்துவிடும். இந்த மைதானம், அகமதாபாத் நகருக்கு மேலும் அழகு சேர்க்கும்” என்றார். 

அதிகாரிகள் ஆய்வு

Photo Credit: Twitter/@mpparimal

63 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் இந்த மைதானத்தில், மூன்று பயிற்சி மைதானங்கள், ஒலிம்பிக் போட்டிக்கான தரத்துடன்கூடிய நீச்சல் குளம், க்ளப் ஹவுஸ் உள்ளிட்டவை இடம்பெற உள்ளது. ஏற்கெனவே, அகமதாபாத் நகரில் உள்ள பழைய மைதானத்தில், 54,000 பேர் அமர்ந்து பார்க்கலாம். ஆனால் புதிய மைதானத்தில், அதன் இரு மடங்கு அளவுக்கு ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். ஆம், இந்த மைதானத்தில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். 

குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கனவுத் திட்டமான இந்த மைதானத்தின் பணிகள், இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.