வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (07/01/2019)

கடைசி தொடர்பு:17:37 (07/01/2019)

54 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றி... ஆசியக் கோப்பையில் இந்தியா அமர்க்களம்!

54 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசியக் கோப்பை கால்பந்துத் தொடரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியாவின் `ப்ளூ டைகர்ஸ்’. 

54 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றி... ஆசியக் கோப்பையில் இந்தியா அமர்க்களம்!

தற்கு முன்பு ஆசியக் கோப்பை கால்பந்துத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற போது, லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக இருந்தார். 1964-ம் ஆண்டு ஆசியக் கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்தப் போட்டிக்குப் பிறகு, ஆசியக் கோப்பை கால்பந்தில் வெற்றி பெறுவது இந்திய அணிக்குச் சவாலாகவே இருந்தது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 2019 ஆசியக் கோப்பை கால்பந்துத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. தாய்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் கலக்கிய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசியக் கோப்பையில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியாவின் `ப்ளூ டைகர்ஸ்’. 

இந்தியா

க்ரூப் `ஏ’பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - தாய்லாந்து அணிகள் லீக் சுற்றில் மோதின. விறுவிறுப்பான முதல் பாதியில், இரண்டு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. போட்டி தொடங்கிய 27-வது நிமிடத்தில் இந்திய அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார் கேப்டன் சுனில் சேத்ரி. அடுத்த 6-வது நிமிடத்தில், ப்ரீகிக் வாய்ப்பில் கோல் அடித்த தாய்லாந்தின் டாங்கடா, போட்டியைச் சமன் செய்தார்.

முதல் பாதி முடிவில், இந்தப் போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக அமையும் எனக் கால்பந்து வட்டாரத்தில் கணித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுனில் சேத்ரி அண்ட் கோ அதைச் செய்து காட்டியது. ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றி தாகத்தைத் தீர்த்தது இந்தியாவின் ப்ளூ டைகர்ஸ். 46-வது நிமிடத்தில் மீண்டும் சுனில் சேத்ரி ஒரு கோல் அடிக்க இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

இந்தியா

60-வது நிமிடத்தில் தன் பங்குக்கு அனிருத் தாபா ஒரு கோல் அடித்தார். மாற்று வீரராகக் களமிறங்கிய ஜெஜெ வந்ததும் வராததுமாக ஒரு கோல் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். கடைசி 20 நிமிடம் எவ்வளவு போராடியும் தாய்லாந்து வீரர்களால், இந்திய அணியின் பெனால்டி பாக்ஸை ஊடுருவி ஷாட் அடிக்க முடியவில்லை. கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே விளையாடிய இந்திய அணி, சுறுசுறுப்பாகப் பந்தை பாஸ் செய்தது. இந்திய கோல் கீப்பர் குருப்ரீத் சிங் சந்து, தாய்லாந்தின் கோல் முயற்சிகளைச் சிறப்பாகத் தடுத்தார். ஒரு புறம் கோல் மழை, மறுபுறம் தடுப்பாட்டம் என அதிரடியாக விளையாடிய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.

சுனில் சேத்ரி - இந்திய கால்பந்து அணி

இந்தப் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் 67 கோல்களை நிறைவு செய்தார் சுனில் சேத்ரி. தற்சமயம் விளையாடிவரும் வீரர்களில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், 85 கோல்களுடன் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளார். இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ள சுனில் செத்ரி, கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியைப் (65) பின்னுக்குத் தள்ளியுள்ளார். 60 கோல்களுடன் பிரேசிலின் நெய்மர், நான்காவது இடத்தில் உள்ளார். 

க்ரூப் `ஏ’ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் அணிகள் மோதிய மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது. தாய்லாந்து அணியைத் தோற்கடித்ததில், `ஏ’ க்ரூப்பின் முதல் இடத்தைப் பிடித்தது இந்திய அணி. ஜனவரி 10-ம் தேதி நடக்க இருக்கும் அடுத்த லீக் போட்டியில், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத உள்ளன. 


டிரெண்டிங் @ விகடன்