வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (08/01/2019)

கடைசி தொடர்பு:20:41 (08/01/2019)

அபினவ் அதிரடி சதம்... அனிகெத் சவுத்ரி மாயாஜாலம்... ரஞ்சி அப்டேட்!

ஓப்பனிங்கில் களமிறங்கிய அபினவ் முகுந்த், 14 பவுண்டரிகள் விளாச, முதல் வரிசை கிரிக்கெட்டில் தனது 29-வது சதத்தை நிறைவு செய்தார்

அபினவ் அதிரடி சதம்... அனிகெத் சவுத்ரி மாயாஜாலம்... ரஞ்சி அப்டேட்!

ஞ்சிக் கோப்பை 2018- 19 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. 9-வது சுற்றுப் போட்டிகளில் அணிகள் மோதி வருகின்றன. தமிழக வீரர் அபினவின் சதம், சுபம் கில் 1000 என நாக்-அவுட்டுக்கு முந்தைய சுற்றில் நடந்த முக்கிய கிரிக்கெட்டிங் மொமன்ட்ஸ்... 

அபினவ் அதிரடி சதம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் டில்லி - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அபினவ் முகுந்த் சதம் அடித்துள்ளார். டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங்கில் களமிறங்கிய அபினவ் முகுந்த், 14 பவுண்டரிகள் விளாச, முதல் வரிசை கிரிக்கெட்டில் தனது 29-வது சதத்தை நிறைவு செய்தார். 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபா இந்திரஜித்துடன் அபினவ் ஜோடி 155 ரன்கள் சேர்த்தது. டில்லி அணி ஷிவம் ஷர்மாவின் சுழலில் சிக்கிய அபினவ், 134 ரன்களுக்கு அவுட்டானார். 

ரஞ்சி கோப்பை

அனிகெத் சவுத்ரி சுழலில் சிக்கிய திரிபுரா

ரஞ்சிக் கோப்பை 2018-19 சீஸனின் 9-வது சுற்றில் திரிபுரா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில், 6-ல் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள திரிபுரா, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் திணறியது. அனிகெத் சவுத்ரியின் மிதவேக மாயாஜாலத்தால், 35 ரன்களுக்குச் சுருண்ட திரிபுரா, முதல் தர கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. இதற்கு முன், 1996-ம் ஆண்டு பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் எடுத்திருந்ததே, திரிபுராவின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. 

ரஞ்சி கோப்பை

டாஸ் வென்ற திரிபுரா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. போட்டியின் இரண்டாவது ஓவரில், தொடக்க வீரர்கள் கவுசல் ஆச்சர்ஜீ, ஜாய்தீப் பானிக் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பெளலிங்கை சமாளிக்க முடியாமல், அடுத்துக் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்கு ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். இடது கை சுழற்பந்துவீச்சாளர் அனிகெத் சவுத்ரி, வெறும் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்றொரு வீரர் தன்வீர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெளலிங்கில் கலக்கிய சவுத்ரி, தன்வீர் பேட்டிங்கிலும் கைகொடுத்தனர். 218 எடுத்த ராஜஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய திரிபுரா, 106 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சஹர் 5 விக்கெட்டுகளையும், சவுத்ரி தன்வீர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஒரு இன்னிங்ஸ் 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது

சுபம் கில் 1000

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்ற இந்திய அணியில் விளையாடிய பஞ்சாபைச் சேர்ந்த சுபம் கில், ரஞ்சிக் கோப்பையில் 1000 ரன்களை எட்டியுள்ளார். 15 இன்னிங்ஸில், 1000 ரன்களை எட்டியுள்ள சுபம் கில், கவனிக்கத்தக்க வீரராக முன்னேறி வருகிறார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில், 187 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது பெங்கால். பஞ்சாப் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, சுபம் கில் 91 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

ரஞ்சி கோப்பை

விக்கெட் வேட்டை

கர்நாடகா - பரோடா அணிகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் மனிஷ் பாண்டே மட்டும் 43 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 112 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது கர்நாடக அணி. லூக்மேன் மெரிவலா, பார்கவ் பட் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அடுத்து விளையாடிய பரோடா அணியின் ஓப்பனர் கேதர் தேவ்தர் டக்-அவுட்டாக, மற்ற பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமான இளம் வீரர் சுபாங் ஹெட்ஜே, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பரோடாவின் பேட்டிங்கை பதம்பார்த்தார். லெக்-ஸ்பின்னர் ஸ்ரேயாஸ் கோபால், தன் பங்கிற்கு 4 விக்கெட்டுகள் எடுக்க, 223 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது பரோடா.


டிரெண்டிங் @ விகடன்