`நியூட்ரல் வென்யூக்களில் போட்டி; தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தேதி முடிவு!’ - ஐபிஎல்-லுக்கு தயாராகும் பிசிசிஐ #IPL12 #BCCI | Whole IPL 12 tournament to be held in India

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (09/01/2019)

கடைசி தொடர்பு:11:32 (09/01/2019)

`நியூட்ரல் வென்யூக்களில் போட்டி; தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தேதி முடிவு!’ - ஐபிஎல்-லுக்கு தயாராகும் பிசிசிஐ #IPL12 #BCCI

வரும் ஐபிஎல் தொடர் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு நடத்திய தீவிர ஆலோசனையின் முடிவில், ஐபிஎல் 12 -வது சீசனை இந்தியாவில் முழுமையாக நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. 

பிசிசிஐ

இந்த வருடம், இந்தியாவில் பொதுத் தேர்தல் மற்றும் ஐபிஎல் தொடர் என இரண்டும் ஒரே நேரத்தில் வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாதி ஐபிஎல் தொடர் வெளிநாடுகளுக்கு மாற்றப்படும் எனப் பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு நடத்திய ஆலோசனையின் முடிவில், முழு ஐபிஎல் தொடரையும் இந்தியாவிலே நடத்த முடிவு செய்யப்பட்டது. 

நிர்வாகக் குழு, மத்திய உள்துறை அமைச்சகம், 8 அணி உரிமையாளர்கள், ஸ்பான்ஸர்கள் எனப் பலரையும் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளதால், தேர்தல் தாமதமாக நடக்கும் இடங்களில் முதல் கட்ட போட்டிகளையும், முதலில் தேர்தல் நடக்கும் இடங்களில் இரண்டாம் கட்ட போட்டிகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

மைதானம்

இதற்காக, சுமார் 20 மைதானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இந்த முறை போட்டிகள் நடத்தமுடியாமல் போகலாம் எனவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாம். அதாவது, தேர்தல்கள் நடக்கும்பட்சத்தில், பொதுவான மைதானத்தில் வைத்து போட்டிகள் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு, அனைத்து அணி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஐ.பி.எல்

ஐபிஎல் சீசன் 12 முழுத் தொடரும் இந்தியாவில்தான் நடைபெறும். விரைவில் போட்டிக்கான அட்டவணை வெளியாகும் என பிசிசிஐ அறிவித்திருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியான பின்னர்தான் ஐபிஎல் அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

வரும் மார்ச் மாதம் 23 -ம் தேதி தொடங்கும் ஐபிஎல் திருவிழா, மே மாதம் 12 -ம் தேதி நிறைவடைகிறது. ஐபிஎல் தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிக்கு நடுவில் 23 நாள்கள் இடைவெளி உள்ளது குறிப்பிடத்தக்கது.