விராட்டின் நம்பிக்கையும் பௌலர்களின் எழுச்சியும்..! கேப்டன் கோலி வெர்ஷன் 2.0 #AUSvIND | Kohli's confidence on his bowlers gave them a new dimension

வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (09/01/2019)

கடைசி தொடர்பு:12:42 (09/01/2019)

விராட்டின் நம்பிக்கையும் பௌலர்களின் எழுச்சியும்..! கேப்டன் கோலி வெர்ஷன் 2.0 #AUSvIND

இப்போது இந்திய அணிக்கு சில மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார்கள். ஆனால், அதைவிட, அவர்கள்மீது கோலி வைத்த நம்பிக்கை மிக முக்கியமானது. அந்த நம்பிக்கையின் பலனைத்தான் அவர் இப்போது அறுவடை செய்திருக்கிறார்.

விராட்டின் நம்பிக்கையும் பௌலர்களின் எழுச்சியும்..! கேப்டன் கோலி வெர்ஷன் 2.0 #AUSvIND

``என் வீரர்களை நினைத்து நான் பெருமைப் படுகிறேன்'' - சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலி சொன்ன வார்த்தைகள். வரலாற்று வெற்றிக்குப் பின் எல்லா கேப்டன்களும் சொல்லும் டெம்ப்ளேட் வார்த்தைகள்தான். ஆனால், வெற்றிக்குப் பின்னால் மட்டும் கோலி அதைச் சொல்லவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்... அடிலெய்ட் மைதானத்தில், இந்திய அணியை முதல் முறையாக டெஸ்ட் அரங்கில் வழிநடத்தியபின், கேப்டனாக முதல் போட்டியில் தோற்ற பின்பும் கோலி சொன்னது இந்த வார்த்தைகள்தான். ``இதுபோன்ற கடினமான சூழலில், கடின உழைப்பைக் கொட்டிய என் வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.'' 

இந்திய கிரிக்கெட்டின் `ஆக்ரோஷ' கேப்டன், இந்த இரண்டு பேட்டிகளுக்கும் நடுவே மாபெரும் மாற்றம் கண்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் மாபெரும் மாற்றம் புகுத்தியிருக்கிறார்.

``கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால், மிகவும் சுமாரான கேப்டன். அவரின் தலைமைப் பண்பில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன'' என்று இந்தத் தொடருக்கு முன்புவரை பலரும் விமர்சித்தனர். உண்மைதான். அவரது அணித்தேர்வு மிகமோசமாக இருந்தது. இருக்கிறது. ஃபீல்டிங் செட் - அப் சுமாராகவே இருந்தது. பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றி, மிடில் ஆர்டரை இன்னும் பலவீனமாக வைத்திருக்கிறார். களத்தில் வீரர்களிடமும் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டினார். இப்படி எத்தனை எத்தனையோ பிரச்னைகள் பேசப்பட்டிருக்கின்றன. விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தன் முதல் தொடரிலிருந்து அவர் இந்திய டெஸ்ட் அணிக்குள் புகுத்திய புதுமையை நாம் உணரவில்லை. இந்திய பௌலிங் யூனிட்டை, இன்று `உலகின் சிறந்த பௌலிங் யூனிட்' என்று ஆஸ்திரேலியர்களே சொல்லும் வகையில் வடிவமைத்ததைப் பற்றிப் பேசவில்லை. 'பௌலர்களால் வென்றோம்' என்று இன்று பெருமை பேசும் நேரத்தில் அதைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்.

கோலி

சுமாரான வேகப்பந்துவீச்சுக் கூட்டணி, இன்று உலகின் சிறந்த பௌலிங் கூட்டணியாக மாறியிருக்கிறது. விராட் கோலி, தன் வேகப்பந்துவீச்சாளர்கள் மீது கொண்டிருந்த `நம்பிக்கை'தான் இந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதுநாள் வரை ஒவ்வொரு இந்திய கேப்டனின் முக்கிய ஆயுதமாக இருந்ததெல்லாம் பேட்ஸ்மேன்கள்தான். அவர்கள் தவிர்த்து மேட்ச் வின்னிங் பௌலர்கள் என்றால் பிஷன் சிங் பேடி, பி.எஸ்.சந்திரசேகர், கும்பிளே, ஹர்பஜன், அஷ்வின் என்றுதான் அந்தப் பட்டியல் நீளும். வெளிநாட்டு ஆடுகளங்களிலும் அவர்களிடம்தான் மாயங்களை எதிர்பார்த்திருக்கிறார்கள் இந்தியக் கேப்டன்கள். ஆனால், கோலி - தன் ஒட்டுமொத்த வேகப்பந்துவீச்சுக் கூட்டணியின்மீதும் நம்பிக்கை வைத்து, அதை உலகின் சிறந்த கூட்டணியாக உருமாற்றியிருக்கிறார்.

ஒரு கேப்டனின் நம்பிக்கை இப்படி ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிடுமா என்ன? நிச்சயம் நிகழ்த்தும். ``இந்திய பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசவில்லை'' என்று ஒவ்வொரு வெளிநாட்டுத் தொடருக்குப் பின்னும் கூறிய கேப்டன்களுக்கு மத்தியில், `20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வென்றுவிடலாம். பௌலர்களின் பங்களிப்புதான் வெற்றிக்கு முக்கியம்'' என்று பேசினார். சில பேட்டிகள், அணியின் கெமிஸ்ட்ரியை மாற்றும். கோலி - அதைப் பேட்டியில் சொன்னதோடு மட்டும் நிற்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தினார். தன் வேகப்பந்துவீச்சாளர்கள்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்தார்.

கோலி - பும்ரா

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோற்றபின்னும், மூன்றாவது போட்டியில் ஒரு ஸ்பின்னரைக்கூட இறக்காமல், ஹர்டிக் பாண்டியா உட்பட 5 வேகப்பந்துவீச்சாளர்களோடு ஒரு கேப்டன் களமிறங்குகிறார் என்றால், அந்தப் பௌலர்கள்மீது அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்! அந்த நம்பிக்கைதான், பௌலர்களுக்குத் தங்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. 2017-ல் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின்போது, ஆஸ்திரேலியாவின் கேப்டனும், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாகவும் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை ஸ்லெட்ஜ் செய்கிறார் இஷாந்த் ஷர்மா... தன் மீது அளவுகடந்த நம்பிக்கை இல்லாத எந்த வீரராலும் அதைச் செய்திட முடியாது. 10 ஆண்டுகள், அணிக்குள் வருவதும் போவதுமாய் இருந்து, கேப்டன்களின் பிரஸ்மீட்டில் பகடையாய் உருட்டப்பட்டு, மீம் மெட்டீரியலாகவே மாறிப்போயிருந்த ஒருவீரரால் அது எப்படி முடிந்தது? இஷாந்துக்கு அந்த நம்பிக்கை எப்படி வந்தது? ``எங்கள் பௌலிங் கூட்டணியை இஷாந்த் வழிநடத்துவார்’’ என்ற ஒரு கேப்டனின் வார்த்தை போதாதா அதற்கு!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா கோப்பை வென்றபின், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அஜித் அகர்கர் இருவரும் இந்தத் தொடர் பற்றி விவாதிக்கொண்டிருந்தனர். அப்போது அகர்கர் சொன்ன விஷயம் : ``தோனி ஸ்பின்னர்கள்மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருந்தார். கங்குலியின் காலகட்டத்தில், வெளிநாட்டுத் தொடர்களில் பேட்ஸ்மேன்கள் அணிக்குக் கைகொடுத்தனர். இப்போதுதான் வேகப்பந்துவீச்சாளர்கள் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றனர். இப்போது இந்திய அணிக்கு சில மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார்கள். ஆனால், அதைவிட, அவர்கள்மீது கோலி வைத்த நம்பிக்கை மிகமுக்கியமானது. அந்த நம்பிக்கையின் பலனைத்தான் அவர் இப்போது அறுவடை செய்திருக்கிறார்" என்றார். அகர்கர் சொன்னது 100 சதவிகிதம் உண்மை.

பும்ரா - ஷமி

அவர்கள்மீது வைத்த நம்பிக்கை மட்டுமல்ல, கோலி அவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் பற்றியும் பேச வேண்டும். மெல்பொர்ன் டெஸ்ட் போட்டிக்குப் பின், இந்திய பௌலிங் யூனிட் பற்றிப் பேசினார் கோலி. ``பௌலர்களுக்கான மீட்டிங்கின்போது நான் அமைதியாக அமர்ந்து கவனிக்க மட்டுமே செய்வேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துகொள்வது அவசியம். எனக்கு ஏதும் `பிளான் பி’ இருந்தால், அதை அவர்களுக்குச் சொல்லுவேன். இப்படித்தான் நாங்கள் இயங்குகிறோம்’’ என்றார். அவர் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம் : ``அதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பௌலர்கள் ஆதிக்கம் செலுத்துவதுதான், வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்தியாவை வெற்றி பெறவைக்கும். அவர்களின் திறமைக்கான உரிமையையும், அணியின் பொறுப்பையும் அவர்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான், அவர்களைத் தனித்துக்காட்டுகிறது.’’ இதுவரை எந்த இந்தியக் கேப்டனும் சொல்லாத விஷயம். இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத விஷயம் ... பௌலிங்கை தன் முக்கிய ஆயுதமாகக் கொண்டு களமிறங்குவது. விராட் கோலி, அதைச் செய்துதான் இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.

இந்தியா தொடர்ந்து சிறந்த வீரர்களை உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல, பௌலர்களையும்தான். சில ஆண்டுகள் முன்பு ஜாகீர் கான், முனாஃப் படேல், பிரவீன் குமார், ஸ்ரீசாந்த், இர்ஃபான் பதான் என சில சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அதற்கு முன் ஜாகீர், நெஹ்ரா, அகர்கர், இர்ஃபான் என்ற கூட்டணி இருந்தது. ஆனால், பேட்ஸ்மேன்கள் ஒரு குழுவாக ஜொலித்ததைப்போல் இவர்களால் ஜொலிக்க முடியவில்லை. சச்சின் - கங்குலி தொடக்க ஜோடியிடம் இருந்த கெமிஸ்ட்ரி, முதல் ஸ்பெல் வீசிய ஜாகீர் - அகர்கர் கூட்டணியிடம் இருந்ததில்லை. யுவ்ராஜ் - தோனி மிடில் ஆர்டர் கூட்டணியிடம் இருந்த புரிதல், மிடில் ஓவர்கள் வீசிய முனாஃப் படேல் - அஷ்வின் ஆகியோரிடம் இருந்ததில்லை. காரணம், இந்தியா பேட்டிங்கையும் பேட்ஸ்மேன்களையும் மட்டுமே பிராதனப்படுத்தியது. கோலி - அதை மாற்றியிருக்கிறார்.

கோலி அண்ட் கோ

ஆனால், இந்த பௌலிங் யூனிட் அப்படியல்ல. ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கின்றனர். அணிக்கு என்ன தேவை என்பதற்கேற்ப தங்கள் பணிகளைச் செய்கின்றனர். ``இந்த பௌலர்களைக் கவனித்தால் ஒரு விஷயம் தெரியும். யாரும் இன்னொருவரைவிட சிறப்பாகப் பந்துவீச வேண்டும் என்று செயல்படுவதே கிடையாது. பும்ரா விக்கெட் எடுத்துக்கொண்டிருந்தால், மற்றவர்கள் ரன்களைக் கட்டுப்படுத்துவார்கள். மற்றவர்கள் விக்கெட் வீழ்த்தினால், ரன் கட்டுப்படுத்தும் வேலையை பும்ரா செய்வார். ஜடேஜா, அஷ்வின் எல்லோருமே இப்படித்தான் செயல்படுகிறார்கள். அதனால்தான் சிறந்த முடிவுகளைப் பெற முடிகிறது’’ என்கிறார் கோலி.

அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் - பும்ரா கூட்டணியின் பந்துவீச்சை நன்கு கவனித்தால் அது தெளிவாகப் புரியும். அதற்கு நல்ல உதாரணம் - இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த செப்டம்பர் மாதம் மோதிய ஆசிய கோப்பை லீக் போட்டி. 'ஸ்டம்ப் டூ ஸ்டம்ப்' லைனில் தொடர்ந்து பந்துவீசி ஃபகர் ஜமானுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் பும்ரா. இரண்டாவது ஓவர் மெய்டன் ஆகும். அடுத்து புவியின் பந்திலும் இரண்டு டாட் பால்கள் வைப்பார். 8 பந்துகளில் ரன்னே அடிக்காத விரக்தியில் ஜமான் இருக்க, ஷார்ட் லென்த்தில் பந்துவீசி விக்கெட் எடுப்பார் புவி. ஃபகர் ஜமானின் பலவீனத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி விக்கெட் வீழ்த்தியிருப்பார். அந்த இடத்தில் பும்ராவின் வேலை - பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுப்பது. அதை அற்புதமாகச் செய்திருப்பார். ஒவ்வொருவரும் அப்படித்தான். அஷ்வின் விக்கெட்டுகள் வீழ்த்தும்போது, ஜடேஜா செய்யும் விஷயம், ரன்னே எடுக்கவிடாமல், பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதுதான். இப்படித்தான் இந்த பௌலிங் யூனிட் இயங்குகிறது. வெற்றிகரமாக...

இந்தியா

அகர்கர் சொன்னதுபோல், கோலி தன் பௌலர்களை அதிகமாக நம்பினார். வாய்ப்புகள் கொடுத்தார். பௌலிங்கால்தான் வெளிநாடுகளில் வெல்ல முடியும் என்பதை நம்பினார். ஒரு மிகச் சிறந்த பௌலிங் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். இந்தத் தொடரை வென்ற பிறகு 'இந்த வெற்றி இந்த அணியின் அடையாளத்தை மாற்றும்' என்று கூறியிருந்தார் கோலி. இந்த அணியின் அடையாளத்தை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் அடையாளத்தை அது மாற்றும். அதன் பின்னால் கோலியும் நிற்பார்.

இத்தனை நாள், நாம் குறையாகக் கூறிய பல விஷயங்களில், தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் கேப்டன் கோலி. இந்தத் தொடரில் எடுத்த சில முடிவுகளால், தன் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ளார். அதனால்தான் இது 'கேப்டன் கோலி 2.0'. அதைப் பற்றிய அலசல் - அடுத்த பாகத்தில்.


டிரெண்டிங் @ விகடன்