`33 ஆண்டுகளுக்கு முந்தைய மாடல் சீருடை’ - ரெட்ரோ ஜெர்ஸியில் களமிறங்கும் ஆஸ்திரேலியா! | Australian team to wear retro jersy in ODI series against India

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (10/01/2019)

கடைசி தொடர்பு:20:20 (10/01/2019)

`33 ஆண்டுகளுக்கு முந்தைய மாடல் சீருடை’ - ரெட்ரோ ஜெர்ஸியில் களமிறங்கும் ஆஸ்திரேலியா!

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள், அந்த அணி கடந்த 1980களில் பயன்படுத்திய ஜெர்ஸியைப் போன்ற சீருடையை அணிந்து விளையாட இருக்கின்றனர். 

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்

Photo Credit: Twitter/@cricketcomau

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், ஒருநாள் தொடர் சிட்னியில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் சமனில் முடிந்தநிலையில், டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதித்தது. டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. 

ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி

Photo Credit: sportingnews.com

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், அந்த அணி கடந்த 1980களில் பயன்படுத்திய ஜெர்ஸியைப் போன்று வடிவமைக்கப்பட்ட சீருடைகளை அணிந்து விளையாட இருக்கிறது. இந்தத் தகவலை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியிருக்கிறது. 1986-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது. அந்தத் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் அணிந்த அதே மாடல் ஜெர்ஸியுடன் தற்போதைய ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. 

பீட்டர் சிடில்

Photo Credit: Twitter/@cricketcomau

இதுகுறித்துப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில், ``33 ஆண்டுகளுக்கு முந்தைய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அணிந்ததுபோன்ற ஜெர்ஸியை அணிந்து ஒருநாள் போட்டிகளில் களமிறங்குவது மிகப்பெரிய கௌரவம். இது வீரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது’’ என்றார். ஏறக்குறைய 8 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிடில், `ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் களமிறங்குவோம் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இளம் வீரருக்கான மகிழ்ச்சியுடன் நான் களமிறங்க இருக்கிறேன்’ என்றார். கடந்த 2010-ம் ஆண்டு நவம்பருக்குப் பின்னர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் பீட்டர் சிடில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.