சிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம் | MS Dhoni met his 87 year old fan in Sydney

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (11/01/2019)

கடைசி தொடர்பு:11:23 (11/01/2019)

சிட்னியில் பயிற்சியை நிறுத்திய தோனி! - 87 வயது ரசிகையை நெகிழவைத்த அந்த தருணம்

ஒருநாள் போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்து மகிழ்ந்துள்ளார் 87 வயது ரசிகை ஒருவர். 

தோனி

உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் என்றால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக தோனி இடம்பிடித்திருப்பார். அந்த அளவுக்கு தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர் எங்கு சென்றாலும் பெரிய பட்டாளமே அவரைப் பின் தொடர்ந்து செல்லும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சிறிய வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் தோனி என்றாலே தனி பிரியம்தான். அதேபோல் தன் ரசிகர்கள் மீது தோனி காட்டும் அளப்பரியது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற குஷியில் அடுத்து மூன்று தொடர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. இந்த ஒருநாள் போட்டிகளில் மகேந்திர சிங் தோனியும் இடம்பெற்றுள்ளார். அதில் விளையாடுவதற்காகக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் சிட்னி சென்றுள்ளார் தோனி. அங்கு இந்திய வீரர்களுடன் ஒருநாள் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தோனி

இந்த நிலையில் எடித் நார்மன் என்ற 87 வயதான ரசிகை நேற்று முன்தினம் தோனியை பார்க்க சிட்னி மைதானத்துக்கு வந்துள்ளார். இதை அறிந்த தோனி தன் பயிற்சியை நிறுத்திவிட்டு நேரடியாகச் சென்று அந்த ரசிகையைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது. தோனியை சந்தித்ததின் மூலம் தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக அந்த ரசிகை குஷியாகியுள்ளார். 

இவர்களின் புகைப்படத்துக்கு வரவேற்பு தெரிவித்து பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் `இதுதான் உண்மையான அன்பு’ ‘ தோனி தன் பணிவை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்’ ‘ மிகவும் அழகிய புகைப்படம்’ எனத் தெரிவித்துவருகின்றனர்.