வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (12/01/2019)

கடைசி தொடர்பு:11:48 (12/01/2019)

இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா -இந்திய அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயம்! #AusVInd

சிட்னியில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற ஆஸ்திரேலிய அணி 289 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. 

குல்தீப் யாதவ்

Photo Credit: Twitter/BCCI

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸை வென்ற  ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின்ச் மற்றும் அலக்ஸ் காரே களமிறங்கினர். டெஸ்ட் போட்டிகளில் இருந்த பின்ச் -ன் மோசமான ஃபார்ம் ஒருநாள் தொடரில் தொடர்ந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் பின்ச் போல்டு ஆனார். அதன்பின் கவாஜா களம் இறங்கினர். 

இந்திய அணி

Photo Credit: Twitter/BCCI

காரே 24 ரன்னில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் அபாரமாகக் கூட்டணி வைத்துச் சிறப்பாக விளையாடினர். இந்தக் கூட்டணியைப் பிரிக்க இந்திய வீரர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தனர். இறுதியில் கவாஜா அரைசதம் அடித்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அடுத்துக் களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் அதிரடியாக விளையாடினார். அரைசதம் அடித்த நிலையில் மார்ஷ் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்தபின்னர் ஹேண்ட்ஸ்கோம்ப் அதிரடியாக விளையாடினார். அவர் 72 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் ஸ்டோனிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அதிரடி காட்ட, ஆஸ்திரேலிய அணி சவாலான ஸ்கோரை எட்டியது. கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 93 ரன்கள் குவித்தது. 

ஆஸ்திரேலியா

Photo Credit: Twitter/BCCI

50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்க இந்திய அணிக்கு 50 ஓவர்களில் 289 ரன்கள் தேவை.