வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (12/01/2019)

கடைசி தொடர்பு:18:43 (12/01/2019)

ரோஹித் ஷர்மா சாதனை சதம்! - ஆஸ்திரேலிய அணிக்கு 1000-வது வெற்றி #AUSvIND

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்

Photo Credit: ICC

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்குப் பின்னர், ஒருநாள் தொடர் சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கடந்த 1986ல் அணிந்திருந்தது போன்ற ஜெர்ஸியை அணிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கினர். இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், பேட்டிங் தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஹேண்ட்ஸ்காம் 73 ரன்களும் உஸ்மான் கவாஜா 59 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

தோனி

Photo Credit: ICC

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பெஹ்ரன்டார்ஃப் மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோர் அதிர்ச்சி அளித்தனர். இந்த ஜோடியின் சிறப்பான பந்துவீச்சில் ஷிகர் தவான், விராட் கோலி மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து, தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்த தோனி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்த நிலையில், பெஹ்ரன்டார்ஃப் பந்துவீச்சில் தோனி ஆட்டமிழந்தார். அவர், 96 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9,999 ரன்களுடன் இந்தப் போட்டியில் களமிறங்கிய தோனி, ஒரு ரன் எடுத்தபோது 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டும் 5வது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். 

ரோஹித் ஷர்மா

Photo Credit: ICC

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, 110 பந்துகளில் சதமடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் ஷர்மா பதிவு செய்த 5வது ஒருநாள் சதம் இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் இந்தியர் ரோஹித் ஷர்மா ஆவார். இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 10 ஓவர்களில் 109 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் 12 ரன்களிலும் ஜடேஜா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வெற்றிக்கு ஒருமுனையில் போராடிய ரோஹித் ஷர்மா 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்தது. இறுதி ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார், 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்

Photo Credit: ICC

இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 1000-வது வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளும் பெஹ்ரன்டார்ஃப், ஸ்டாயினிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது.