ஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர் -பாண்ட்யா, ராகுலுக்கு மாற்று வீரர்களை அறிவித்த தேர்வுக் குழு! #BCCI | BCCI announces the replacement players for pandya and rahul

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (13/01/2019)

கடைசி தொடர்பு:08:45 (13/01/2019)

ஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர் -பாண்ட்யா, ராகுலுக்கு மாற்று வீரர்களை அறிவித்த தேர்வுக் குழு! #BCCI

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பாண்ட்யா மற்றும் ராகுல் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையைக் கிளப்ப, அவர்கள் இருவரும் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடர் ஆகியவற்றுக்கு மாற்று வீரர்களை அறிவித்துள்ளது தேர்வுக் குழு.  

பாண்ட்யா - ராகுல்

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று சிட்னியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தொடரை வெல்ல மீதம் இருக்கும் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றப் பெற வேண்டியது கட்டாயம். 

பிசிசிஐ

முன்னதாக இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகியோரை பிசிசிஐ  இந்தியாவுக்குத் திரும்ப உத்தரவிட்டது. அவர்கள் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்த கிரிக்கெட் நிர்வாகம் அவர்களை நாடு திரும்ப உத்தரவிட்டது. விசாரணை முடியும் வரை அவர்கள் இந்திய அணிக்காக விளையாட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விஜய் சங்கர்

இந்நிலையில்தான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் பாண்ட்யா, ராகுல் ஆகியோருக்கு மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் இளம் வீரர் சுப்மான் கில் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் விஜய் சங்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாகவே அணியுடன் இணைந்து விடுவார். இவர் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடுவரிசை பேட்ஸ்மேனான் இவர் மீடியம் ஃபாஸ்ட் ஆல் ரவுண்டராகவும் செயல்படக்கூடியவர்.

சுப்மான் கில்

கடந்த இளையோர்(19 வயதுக்குட்பட்டோர்) உலகக்கோப்பை தொடரில் சிறந்த வீரர் விருதை வென்ற சுப்மான் கில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய ஏ அணிக்காகவும் பஞ்சாப் அணிக்காகவும் முதல்தரப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் இந்த இளம் வீரர். ரஞ்சி டிராபி தொடரில் 10 இன்னிங்ஸில் 790 ரன்கள் குவித்து 98.75 சராசரியுடன் உள்ளார். 2018 -ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் சிறப்பாக அமைந்ததாகவும், 2019 -ல் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் எனவும் முன்னதாகவே கில் ஒரு தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்திருந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.