வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (14/01/2019)

கடைசி தொடர்பு:16:40 (14/01/2019)

7-வது பந்தில் அவுட்; குழம்பிய பார்வையாளர்கள் - டி20-யில் நடந்த தவறுக்கு யார் காரணம்?

டி20 போட்டி ஒன்றில், நடுவர் ஒருவரின் தவறால் நடந்த சம்பவம் பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கிளிங்கர்

PC :CA

பெர்த்தில், நேற்று சிட்னி சிக்ஸர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகளுக்கிடையேயான டி20 போட்டி நடைபெற்றது. இதில், போட்டியைத் தொடங்கிய  சிட்னி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பெர்த் அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 178 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில், நடுவரின் தவறால் நடந்த சம்பவம் பார்வையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பெர்த் அணியின் தொடக்க வீரரான மைக்கேல் கிளங்கர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 2-வது ஓவரின் கடைசிப் பந்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அந்தப் பந்தில், கீப்பர் பிடித்த கேட்ச் குறித்த 3-வது நடுவருக்கு ஆலோசனை கோரப்பட்டது. அவர் ஆட்டமிழந்ததை 3 நடுவரும் உறுதிசெய்து அவுட் கொடுத்தார். ஆனால் அந்த பந்து, 7-வது பந்து என்பதுதான் வேடிக்கை.

கிங்கர்

 

நடுவர் பந்தை சரியாக எண்ணாததின் விளைவாக இந்தத் தவறு நடந்துள்ளது. இதுதொடர்பாக மூன்றாவது நடுவரும் கவனிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. ஓவர் கணக்குகளை நடுவர் எடுக்கும்போது, அதில் தலையிட 3 -வது அம்பயருக்கு அதிகாரமில்லை. அதன் காரணமாகத்தான், அவர் பந்தின் தன்மையை மட்டும் ஆராய்ந்து, அவுட்டா இல்லையா எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இந்தத் தவறால் அந்த அணிக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அந்த அணி வெற்றிபெற்றதன் காரணமாக இந்தப் பிரச்னை பெரிதாகவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. மேலும், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. இவ்வளவு டெக்னாலஜி வளர்ச்சியிலும் பந்துவீச்சில் தவறு நடந்துள்ளது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.