கார்டியோலாவின் டிரெஸ்ஸிங் ரூம் ரகசியம் பகிரும் `All or Nothing!’ | All or Nothing sports documentary review

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (15/01/2019)

கடைசி தொடர்பு:12:38 (15/01/2019)

கார்டியோலாவின் டிரெஸ்ஸிங் ரூம் ரகசியம் பகிரும் `All or Nothing!’

கார்டியோலாவின் டிரெஸ்ஸிங் ரூம் ரகசியம் பகிரும் `All or Nothing!’

All or Nothing : Manchester City - ஒரு கால்பந்து கிளப் எப்படி இயங்கும் என்பதை `டாப் டு பாட்டம்’ அலசிய ஒரு அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் டாக்குமென்ட்ரி! அமேசான் பிரைமில் எட்டு பாகங்களாக வெளிவந்திருக்கும் இந்த டாக்குமென்ட்ரி, ஃபுட்பால் பிரியர்களுக்கு ஃபுல் மீஸ்ஸ் சாப்பிட்ட திருப்தி தரும். பைசா செலவில்லாமல் எடிஹாட் ஸ்டேடியத்தை 360 டிகிரியில் சுற்றிப் பார்த்த ஃபீல் கிடைக்கும். உங்களுக்குப் பிரிமியர் லீக் பிடிக்காமல் இருக்கலாம், பெப் கார்டியோலா உங்கள் பரம எதிரியாக இருக்கலாம், மான்செஸ்டர் சிட்டி மீது உங்களுக்கு  இனம்புரியாத வெறுப்பு இருக்கலாம், ஆனாலும், ஒவ்வொரு கிளப் கால்பந்து ரசிகனும் அவசியம் பார்க்க வேண்டிய ஆவணம் இது.

`கிளப் விசுவாசம்’ என்ற ஒன்லைனை மையமாக வைத்து லிவர்பூல் ஜாம்பவான் ஸ்டீவன் ஜெரார்டுவைப் பற்றி `Make us Dream’ என்ற டாக்குமென்டரி எடுத்திருந்தது அமேசான் பிரைம். தனிநபர் புகழ் பாடியதில் `Make us Dream’ அல்டிமேட் எனில், `ஒரு கிளப் ரன் பண்றதுல இவ்ளோ விஷயம் இருக்கா’ என்ற பிரமிப்பை ஏற்படுத்திய விதத்தில் All or Nothing அட்டகாசமான படைப்பு. 

All or Nothing

மற்ற ஸ்போர்ட்ஸ் டாக்குமென்ட்ரிகளில் இருந்து All or Nothing மேம்பட்டு இருக்க பல உதாரணங்கள் சொல்லலாம். 30 யார்டு பாக்ஸுக்கு வெளியே இருந்து கெவின் டி ப்ரூய்ன் எப்படி கோல் அடிப்பார் என்பது இந்த உலகத்துக்கே தெரியும். ஆனால், டிரெஸ்ஸிங் ரூமில் அவர் எப்படி இருப்பார்? ஒரு அணியில் ஃபிசியோவின் பங்கு என்ன? சப்போர்ட்டிங் ஸ்டாஃப் என்னவெல்லாம் செய்வார்கள்? வீரர்களின் உடமைகளைப் பராமரிப்பவருக்குப் பின்னால் இப்படியொரு கதை இருக்கிறதா?

மிட் சீசனில் ஒரு முன்னணி வீரருக்கு ஏற்படும் காயம் கிளப்பை எப்படி பாதிக்கும்? அந்த வீரருக்கு எங்கு, எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? `Derby’ ரைவல்ரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் சென்ற பஸ்ஸை ஏன் லிவர்பூல் ரசிகர்கள் தாக்குகிறார்கள்? Bundesliga-ல் இருந்தே தொடரும் கார்டியோலா - க்ளோப் ரைவல்ரி என, ஒரு டாக்குமென்டரிக்குள்தான் எத்தனை எத்தனை விஷயங்கள்!

All or Nothing

பயிற்சி, களம், கோல், கொண்டாட்டம், பிரஸ் மீட் காட்சிகளுடன் கடந்து போயிருந்தால் இது மற்றுமொரு ஆவணப்படமாக இருந்திருக்கும். மறைந்திருக்கும் ஒன்றின் மீது எப்போதுமே மனிதனுக்கு ஈர்ப்பு அதிகம். அந்த வகையில், லாக்கர் ரூம் காட்சிகள்தான், இந்த டாக்குமென்டரியின் ப்ளஸ். டிரெஸ்ஸிங் ரூமில் பேசப்படும் காட்சிகளை, கெட்ட வார்த்தைகளை உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருப்பதற்காகவே சபாஷ் போடலாம். பென் கிங்ஸ்லே கதையைச் சொன்னவிதம் கச்சிதம். பொதுவாக, பிரிமியர் லீக் கமென்ட்ரி நன்றாக இருக்கும். அதை சப் டைட்டிலுடன் பார்க்கும்போது இன்னும் சுவாரஸ்யம். 

All or Nothing

வெற்றிக்குப் பிறகு, ஆட்ட நாயகன் டி ப்ரூய்ன் கடைசியாக டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரும்போது எல்லோரும் சேர்ந்து அவர் பெயரை பாடி கொண்டாடும்போது, நமக்கும் `டிப் ரூய்ன், டி ப் ரூய்ன்...’ என்று பாடத் தோன்றுகிறது. தோல்விக்குப் பின் அவரவர் இருக்கையில் வதங்கிய பூவைப் போல இருக்கும் வீரர்களைப் பார்க்கையில் நமக்குப் பரிதாமாக இருக்கிறது. வீரர்கள் காத்திருக்கும் அறையில் கடைசியாக நுழையும் கார்டியோலா, கதவைச் சாத்திவிட்டு பேசப் போகும் வார்த்தை நம்மையும் கூர்ந்து கவனிக்கச் சொல்கிறது.  டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும்`Some are born here, some drawn here, but we all call it home’ வாசகம், ஒவ்வொருமுறையும் கவனம் ஈர்க்கிறது. 

மான்செஸ்டர் சிட்டி 2017 - 18 சீசனில் பிரிமியர் லீக் வென்ற கதைதான் இந்த ஆவணப்படத்தின் சாரம்சம். இந்த வெற்றிக்குப் பின்னால் இத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது, இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது எனச் சொன்னாலும், ஆவணம் முடியும் தருணத்தில் கார்டியோலா என்ற பிம்பம் பிரமாண்டமாக எழுந்து நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு முதன்முறையாக வந்த நாளில் தொகுப்பாளர் கேட்ட`வரவேற்பு எப்படி’ என்ற கேள்விக்கு `Not bad’ என்று சொல்வதில் இருந்து டிரெஸ்ஸிங் ரூமில் அரைகுறை  ஆங்கிலத்தில் பேசுவது வரை, படத்தை ஒற்றை ஆளாகத் தாங்கி நிற்கிறார் பெப். 

pep guardiola

வெற்றிக்குப் பின் மமதை வேண்டாம் என எச்சரிப்பது, தோல்விக்குப் பின் தேற்றுவது, இடைவேளையின்போது `நீ அங்க போ, நீ இங்க வா...’ என, போர்டில் காய்களை நகர்த்தி டெக்னிக்கல் ரீதியாக வியூகம் வகுப்பது என ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் எத்தனை எத்தனை திட்டங்கள், எத்தனை எத்தனை திட்டுகள்?! `நீங்கள் பயிற்சியாளராகும்போது உங்களுக்குப் பிடித்தமாதிரி வீரர்களை விளையாடச் சொல்லுங்கள். ஆனால், இன்று, இங்கு நான்தான் உங்கள் பாஸ். நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்’ என கறாராகச் சொல்லும், கார்டியோலா, தன் தவறான முடிவை வீரர்களை விமர்சிக்கச் சொல்லவும் தவறவில்லை.

ஒரு கட்டத்தில், மான்செஸ்டர் யுனைடெடை வீழ்த்தி சொந்த மண்ணில் பிரீமியர் லீக் டைட்டில் ஜெயித்துவிடலாம் என கனவில் மிதந்தனர் சிட்டி ரசிகர்கள். அதற்கேற்ப முதல் பாதியில் கொம்பனி, குண்டோகன் கோல்கள் அடிக்க, சிட்டி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் போக்பா இரண்டு கோல் அடிக்க எடிஹாட் மைதானத்தில் நிசப்தம். முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் 3-2 என வெற்றி பெற்று, சிட்டியின் முடிசூட்டு விழாவுக்கு முட்டுக்கட்டை போட்டது. 

All or Noting

போட்டி முடிந்ததும் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வந்த கார்டியோலா வீரர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு கெஞ்சுவார். அமைதியானதும் பேசத் தொடங்கியவர், `நீங்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறீர்கள். உண்மையின் என் முடிவை (கெவின் டி ப்ரூய்ன், அகுவேரா,கேப்ரியல் ஜீசஸ் வீரர்களை ஸ்டார்ட்டிங் லெவனில் சேர்க்காதது) விமர்சிக்க வேண்டும். அதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறது’ என்பார். பேசி முடித்தபின், அடுத்த போட்டிக்கு தயாராகலாம் என கைதட்டி உற்சாகப்படுத்துவார். அப்போது சப்போர்ட்டிங் ஸ்டாஃப் மட்டுமே அவருடன் கைதட்டுவார்கள். வீரர்கள் மெளனமாக இருப்பார்கள். இதுபோன்ற காட்சிகளில் இருக்கிறது இந்த டாக்குமென்ட்ரியின் உயிர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்