அதிரடி மார்ஷ்; `அசால்ட்’ புவனேஷ்வர் -தொடரைச் சமன் செய்ய இந்தியாவுக்கு 299 ரன்கள் தேவை #AusVInd | Australia sets challenging Total for India in second ODI

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (15/01/2019)

கடைசி தொடர்பு:12:48 (15/01/2019)

அதிரடி மார்ஷ்; `அசால்ட்’ புவனேஷ்வர் -தொடரைச் சமன் செய்ய இந்தியாவுக்கு 299 ரன்கள் தேவை #AusVInd

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 299 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார். 

இந்திய அணி

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2 -வது ஒருநாள் போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் தொடரில் நீடிக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இந்தியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 

ஷமி

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பின்ச் இந்தப் போட்டியிலும் சொதப்பினார். 6 ரன்களில் அவர் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலே அலெக்ஸ் கேரியை ஷமி வீழ்த்த இந்திய அணிக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. ஆனால் அடுத்து வந்த மார்ஷ் கவாஜா ஜோடி நேர்த்தியாக விளையாடியது. மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய இந்த இணை ரன் ரேட்டையும் உயர்த்தியது. 

மார்ஷ்

சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கவாஜா ஜடேஜாவின் அற்புதமான த்ரோ -வால் ரன் அவுட் செய்யப்பட்டார்.  அதன் பின்னர் களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டொனிஸ் முறையே 20 மற்றும் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மார்ஷ் தனது அபாரமான ஃபார்மை தொடர்ந்தார். 

மேக்ஸ்வெல்லும் தனது பங்குக்கு கம்பெனி கொடுக்க மார்ஷ் தனது 7 வது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். சதம் அடித்தப் பின்னர் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல்  டாப் கியயரில் அடித்து விளையாடினர்.  தொடர்ந்து மோசமான ஃபார்மில் தவித்து வந்த மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் அதிரடி காட்டினார். இந்தியாவின்  அறிமுக வீரர் சிராஜ் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதே ஓவரில் மார்ஷையும் புவனேஷ்வர் குமார் காலி செய்ய இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். 

புவனேஷ்வர் குமார்

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமான மார்ஷ் 131 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடரைச் சமன் செய்ய இந்திய அணிக்கு 50 ஓவர்களில் 299 ரன்கள் தேவை.