``டெஸ்ட் தொடரில் ஏன் விளையாடவில்லை?” -ஒருநாள் போட்டியில் சொல்லி அடித்த புவனேஷ்வர் | Bhuvneshwar Kumar speaks about test match and on going one day

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/01/2019)

கடைசி தொடர்பு:14:30 (15/01/2019)

 ``டெஸ்ட் தொடரில் ஏன் விளையாடவில்லை?” -ஒருநாள் போட்டியில் சொல்லி அடித்த புவனேஷ்வர்

இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டார். ஆஸ்திரேலியாவின் ரன்களைக் கட்டுப்படுத்தியதோடு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முன்னதாக அவர், நடந்த முடிந்த டெஸ்ட் தொடரில் விளையாடாதது குறித்து பேசியுள்ளார். 

புவனேஷ்வர் குமார்

டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இடம் பிடித்திருந்தும் 4 போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. பும்ரா இல்லாத இந்திய அணியில் புவனேஷ்வர் குமாரை தான் அதிகமாக நம்பியுள்ளது.  இதுதொடர்பாக நேற்று அவர் பேசும்போது,  ``ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஒருமாதமாக நான் விளையாடவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஒரு ரிதமில் பந்துவீச வலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். 

ஒருநாள் போட்டிக்காக நான் தயாராகவில்லை. தொடர்ந்து பந்துவீச பயிற்சி செய்து கொண்டிருந்தேன். மேலும் டெஸ்ட் தொடரின் போது 100% தயாராக இல்லை. ஒரு வீரராகக் களத்தில் இறங்கும்போது 100% ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். அதிலும் டெஸ்ட் போட்டிகள் 5 நாள் விளையாட வேண்டும். முழுமையாகத் தயாராக இல்லை என்றால் களமிறங்காமல் இருப்பதே நல்லது. 

காயத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர் எனது சீரான வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறினேன். இந்த ஒருமாத இடைவெளியில் தினமும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டதால் எனது சராசரி வேகத்தில் தற்போது பந்து வீச முடிகிறது. முதல் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசினேன் என்றும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் மோசமாகவும் பந்துவீசவில்லை. அடுத்த அடுத்தப் போட்டிகளில் எனது பந்துவீச்சில் முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன். 

தற்போது ஒருநாள் போட்டிகளுக்காக யார்கர் பந்துவீசப் பயிற்சி மேற்கொண்டேன். யார்கர் பந்துவீச கொஞ்சம் சிரமம்தான். அதற்கு அதிகப்படியான பயிற்சிகள் தேவை. டெஸ்ட் போட்டிகளுக்கு யார்கர் பந்து தேவைப்படாது. கடந்த ஒருமாதமாக யார்கர் பந்துகளை வீசவில்லை. இதனால் தற்போது அந்தப் பயிற்சியில் ஈடுபட்டேன். 

தோனி எந்த இடத்தில் இறங்கி பேட் செய்ய வேண்டும் என அணி நிர்வாகம் முடிவு செய்கிறதோ அந்த இடத்தில் அவர் களமிறங்க தயாராக இருக்கிறார். எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பாக செயல்படுகிறார். அதுதான் முக்கியம்” என்றார். 

அடுத்த அடுத்தப் போட்டிகளில் தனது பந்துவீச்சில் முன்னேற்றம் இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்ததைப் போலவே இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.