`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா!’ - கறுப்பு நிற பொம்மைக்குக் குவியும் லைக்ஸ் | Serena Williams gets likes for her gift to daughter

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (16/01/2019)

கடைசி தொடர்பு:11:26 (16/01/2019)

`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா!’ - கறுப்பு நிற பொம்மைக்குக் குவியும் லைக்ஸ்

செரினா வில்லியம்ஸ்.... டென்னிஸ் விளையாட்டில் இந்தப் பெயருக்கு நடுங்காத வீராங்கனைகளே இருக்க முடியாது. களத்தில் தனது அதிரடியான ஷாட்களால் எதிரே நிற்பவரை நிலைகுலையச் செய்யும் தந்திரம் இவருக்குக் கைவந்த கலை. அதே நேரத்தில் தனது மகளுக்கு அன்பான தாயாகவும் ஸ்கோர் செய்வார். 2017 -ம் ஆண்டில் அவருக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா என்ற அந்த தேவதை பிறந்தது. 

செரினா

அப்போது செரினாவின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகப் பலரும் கூறினர். ஆனாலும் மீண்டும் களத்தில் இறங்கி தான் யார் என நிரூபித்தார். கடந்த சில நாள்களாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சில புகைப்படங்கள் அதிக கவனம் பெற்றது. அது தனது மகள் ஒலிம்பியாவுக்கு அவர் வாங்கிக் கொடுத்த கறுப்பு நிற பொம்மைதான். 

ஒலிம்பியா

தற்போது அவர் அந்தப் பொம்மை குறித்தும், அதை வாங்கிக் கொடுத்த காரணம் குறித்தும் பகிர்ந்துள்ளார். தனது மகளுக்குப் பரிசளித்த கறுப்பு நிற `குவாய் குவாய்’ (Qai Qai) பொம்மை குறித்து அவர் கூறுகையில், ``எனது மகளுக்கு நான் வாங்கிக் கொடுக்கும் முதல் பொம்மை கறுப்பு நிற பொம்மையாகத்தான் இருக்க வேண்டும் என முன்னரே தீர்மானித்திருந்தேன். நான் கறுப்பு நிற பொம்மைகளை அதிகம் பார்த்ததில்லை. அதன் காரணமாகவே தேடித் தேடி அவளுக்குக் கறுப்பு நிற பொம்மையை வாங்கிக் கொடுத்தேன். 

குவாய் குவாய்

அவள் கறுப்பு மற்றும் கெளகாசியன் கலப்பு. அவள் கைகளில் கிடைக்கும் முதல் பொம்மை கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அவளது இரண்டாவது பொம்மை வெள்ளை நிறத்தில் இருக்கும். அனைவரையும் நேசிக்க வேண்டும். அவர்கள் என்ன நிறம் என்று பார்க்கக் கூடாது. நிறங்களைத் தவிர்த்து மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் அவளுக்குக் கறுப்பு நிற `குவாய் குவாய்’ பொம்மையை வாங்கிக் கொடுத்தேன்.” என்றார். 

இதன்மூலம் மீண்டும் தாயாக நீங்கள் எங்களின் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.   ஒலிம்பியாவின் இந்தப் பொம்மைக்குத் தனி இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. அதில் அந்தப் பொம்மையை சுமார் 87,000 பேர் பின் தொடர்கிறார்கள்.