`தினமும் 3 லிட்டர் பால் குடிக்கிறேனா?' - ஃபிட்னெஸ் ரகசியம் சொன்ன தோனி! | dhoni consuming five litres of a milk a day

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (17/01/2019)

கடைசி தொடர்பு:10:02 (17/01/2019)

`தினமும் 3 லிட்டர் பால் குடிக்கிறேனா?' - ஃபிட்னெஸ் ரகசியம் சொன்ன தோனி!

ஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் 37 வயது தோனி அடித்து நொறுக்கி எடுத்து விட்டார். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் போல விக்கெட் கீப்பர்களும் கடினமான பணி மேற்கொள்பவர்கள். 50 ஓவர்களும் விக்கெட் கீப்பிங் செய்யும் ஒருவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டுகிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. தோனியின் ஃபினிஷிங் கிரிக்கெட் உலகில் மிகவும் பாப்புலர். சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது இவருக்கு நிறையவே பிடித்தது. சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினாலும் தேவைப்படும் நேரத்தில் 3 ரன்கள் வரை ஓடியே எடுக்கும் தோனியின் ஃபிட்னஸைக் கண்டு வியக்காமலும் இருக்க முடியாது. 22 அடி நீளப் பிட்சிலும் `கேப்டன் கூல்' புயல் போல ஓடி ரன்களைச் சேகரிக்கும் அழகே அழகு!

தோனி

தோனியிடம் ஒருமுறை, `தினமும் 3 லிட்டர் பால் குடிக்கிறீர்களாமே... இதுதான் உங்கள் ஃபிட்னஸ் ரகசியமா?' என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, `பாலில் தயாரிக்கப்பட்ட பொருள்களை விரும்பிச் சாப்பிடுவேன். 18 வயது வரை தினமும் 1 லிட்டர் பால் குடித்தேன். அதற்காகத் தினமும் 3 லிட்டர் பால் குடிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். பொதுவாக கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நாள்களில் புரேட்டின் நிறைந்த பானங்கள், பழச்சாறுகளை தோனி அதிகம் எடுத்துக்கொள்வார். இவர் பட்டர் சிக்கன் விரும்பி. பட்டர் சிக்கனைக் கணக்கில்லாமல் உள்ளே தள்ளுவார். காலையில் கஞ்சி வகை உணவுகளுடன் பழங்கள், பதாம் பருப்பு போன்றவற்றைச் சாப்பிடுவார். மறக்காமல் ஒரு கிளாஸ் பாலும் குடிப்பார். மதியம் கண்டிப்பாக சிக்கன் வேண்டும். சாதம், பருப்பு வகைகள் போன்றவற்றையும் உண்பார். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கள், சிக்கன் சான்ட்விச் போன்றவையும் இவருக்குப் பிடித்தமானவை. 

தோனி

தோனி அடிப்படையில் கால்பந்து வீரர். சிறுவனாக இருந்த போதுதான் எடுத்த கால்பந்து பயிற்சி தனக்கு இத்தகைய ஃபிட்னஸைத் தருவதாக நம்புகிறார். பெரிய அளவில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதில்லை. இயற்கையாகவே தனக்கு இத்தகைய ஃபிட்னஸ் இருந்ததாகவும் தோனி சொல்கிறார். `உத்ராஞ்சல் அல்மோரா எனக்குத் தாய் மண். இந்தப் பகுதி மலை சார்ந்த இடம். ஜீன்லயே இத்தகைய பிட்னஸ் இருந்திருக்கலாம்' என்றும் கூறுகிறார். தற்போது, பிட்னஸுக்காக தோனி பேட்மின்டனும் விளையாடுகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க