`எதைச் செய்யணும், எதைச் செய்யக் கூடாதுனு தெரியும்!' - நாளைய போட்டிகுறித்து தவான் | MS Dhoni Regaining Form Shikhar Dhawan Express his joy

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (17/01/2019)

கடைசி தொடர்பு:17:12 (17/01/2019)

`எதைச் செய்யணும், எதைச் செய்யக் கூடாதுனு தெரியும்!' - நாளைய போட்டிகுறித்து தவான்

மகேந்திர சிங் தோனி, இந்த ஆண்டை சிறப்பாகத் தொடங்கி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு ஒரு நாள் போட்டியிலும் நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தோனி, இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தனது வழக்கமான பாணியில், போட்டியை தித்திப்பாக முடிந்துவைத்தார். தோனியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

தோனி

இதுதொடர்பாகப் பேசியுள்ள தவான், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒரு நாள் போட்டியிலும் தோனி விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. பழைய தோனியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.  களத்தில் மிகவும் அமைதியாக விளையாடக்கூடிய வீரர் தோனி. அவரது செயல்பாடுகள், மற்ற வீரர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். இது, எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தினேஷ் கார்த்திக் இறுதியில் சிறப்பாகச் செயல்பட்டார். இந்திய அணியில் அனுபவ வீரர்கள் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். பேட்டிங் ஆர்டர் வலுவாகக் காணப்படும். கடந்த சில ஆண்டுகளாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறோம். இனி வரும் காலங்களிலும் அது தொடரும்.

இந்தியா

ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து விளையாடுவது எனக்கு சௌகரியமான ஒன்று. இருவருக்கும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது தெரியும். பெரிய விவாதங்கள் எதுவும் எங்களுக்குத் தேவைப்படாது. புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி இருப்பது  கூடுதல் பலம். குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில், பேட்ஸ்மேன்கள் நெருக்கடி கொடுத்தால் அவர்களால் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஈடுபடமுடியாது. அவர்களது அனுபவத்தால்தான், முதல் 10 ஓவர்களில் எங்களால் ஆதிக்கம் செலுத்தமுடிகிறது. ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணிக்கு இழப்புதான். நாளைய போட்டி, இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. நாளைய போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்தப் போட்டியில் கிடைக்கும் வெற்றி, மிகப்பெரியதாக இருக்கும்” என்றார்.