2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன?  | MS Dhoni low run scored this year

வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (18/01/2019)

கடைசி தொடர்பு:05:15 (18/01/2019)

2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன? 

லகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பணியை ரிசப் பன்ட்டிடம் ஒப்படைப்பதே சரியானது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தோனி

வரும் மே மாதத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணியில் தோனி இடம் பெறுவரா? என்பது தற்போது தொக்கி நிற்கும் கேள்வி. ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள்  ஆட்டங்களில் தோனி தன்னை நிரூபித்தது உண்மைதான். அதே வேளையில்,எப்போதுமில்லாத அளவுக்கு இந்த கேலண்டர் ஆண்டில்தான் மிகக் குறைவான ரன்களை அவர் எடுத்துள்ளார். என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

2018- ம் ஆண்டு 18 ஒருநாள் ஆட்டங்களில் தோனி விளையாடியிருக்கிறார். 252 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 25.20. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகக் குறைவான சராசரி இதுதான். ஸ்ட்ரைக் ரேட் 68.10. மிக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டும் இதுதான். ஜனவரி 12-ந் தேதி சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் தோனி 96 பந்துகளைச் சந்தித்து 51 ரன்களை எடுத்தார். 'தோனியா இன்னிங்ஸை கட்டமைக்க இவ்வளவு போராடுகிறார் என்கிற கேள்வி எழாமல் இல்லை. 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 37வயது தோனி ஸ்பின்னர்களை எதிர்கொள்ளத் திணறுகிறார் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். 

சீனியருடன் ரிசப் பன்ட்

இதனால் உலகக் கோப்பை தொடருக்கு ரிசப் பன்ட்டிடம் விக்கெட் கீப்பிங் பணியை ஒப்படைப்பதே சிறந்தது என்றும் சொல்கிறார்கள். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் பன்ட்.  அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்சுகளை பிடித்துச் சாதித்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் இத்தனை கேட்ச்சுகளை வேறு எந்த விக்கெட் கீப்பரும் பிடித்ததில்லை. இளம் வீரர், திறமை மிகுந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிசப் பன்ட் 7 இன்னிங்ஸ்களில் 350 ரன்களை அடித்தார். சிட்னி டெஸ்டில் அட்டகாசமாக ஆடி 159 ரன்களையும் குவித்தார். சராசரி 58.33. தற்போது 21 வயதான ரிசப் பன்டை ஆஸ்திரேலிய கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட், தோனி ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசப்படுகிறார். ஆனால், ரிசப் பன்டோ ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டுத் தான் பேசப்படுவதை விரும்பவில்லை. ஆடம் கில்கிறிஸ்ட், தோனி ஆகியோர் என்னுடைய வழிகாட்டிகள். நான் அவர்களிடத்தில் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேனே தவிர அவர்களைப் போலவே மாற ஆசைப்படவில்லை. நான் நானாக ரிசப் பன்டாக இருக்கவே விரும்புகிறேன் என்கிறார் அவர். எனவே, ரிசப் பன்ட்தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் சாய்ஸ் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க