ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்த சஹால்! - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 231 இலக்கு #AUSvIND | Australia sets 231 runs target to India in Melbourne ODI

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (18/01/2019)

கடைசி தொடர்பு:12:23 (18/01/2019)

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்த சஹால்! - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 231 இலக்கு #AUSvIND

மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்ல 231 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இந்திய அணி

Photo Credit: ICC

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும். மழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி 3 மாற்றங்களுடன் களமிறங்கியது. முகமது சிராஜ், அம்பாதி ராயுடு மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக விஜய் சங்கர், கேதர் ஜாதவ் மற்றும் யுஷ்வேந்திர சஹால் ஆகியோர் களமிறங்கினார்கள். 

இந்திய அணி

Photo Credit: ICC

இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, புவனேஷ்வர் குமார் நெருக்கடி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் தொடக்க வீரர்கள் கேரி மற்றும் பின்ச் ஆகியோரின் விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது. 27 ரன்களை எடுப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்தத் தொடரில் மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சஹால்

Photo Credit: ICC

மூன்றாவது விக்கெட்டுக்குக் கைகோத்த உஸ்மான் கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடி சிறிது தாக்குப்பிடித்து விளையாடியது. இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. மார்ஷ் 39 ரன்களும் கவாஜா 34 ரன்களும் எடுத்து சஹால் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 48.4 ஓவர்களில் 230 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.