மெட்ராஸின் மெஸ்ஸிகளைக் கண்டறியும் 'சென்னையின் எஃப்.சி சாம்பியன்ஷிப்' | Chennaiyin FC championship football tournament to develop grassroot football in the state

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (18/01/2019)

கடைசி தொடர்பு:18:55 (18/01/2019)

மெட்ராஸின் மெஸ்ஸிகளைக் கண்டறியும் 'சென்னையின் எஃப்.சி சாம்பியன்ஷிப்'

கால்பந்தை இளம் தலைமுறையிலிருந்து வளர்த்தெடுக்க, புதியதொரு முயற்சியை எடுத்துள்ளது சென்னையின் எஃப்.சி. 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் என இரண்டு பிரிவுகளில், 'சென்னையின் எஃப்.சி கால்பந்து சாம்பியன்ஷிப்' தொடரை நடத்தி, மெட்ராஸின் மெஸ்ஸிகளைக் கண்டறியும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது ஐ.எஸ்.எல் தொடரின் நடப்பு சாம்பியன். வரும் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி, நான்கு வாரங்கள் நடக்கும் இந்தத் தொடரில், 64 பள்ளிகளைச் சேர்ந்த 1100-கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

இரண்டு பிரிவிலும், முறையே முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணியின் வீரர்கள், சென்னையின் எஃப்.சி வீரர்களோடு சேர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர்களிடம் பயிற்சிபெறுவார்கள். சென்னை அணியின் துணைப் பயிற்சியாளர் சபீர் பாஷா, நடுகள வீரர் தனபால் கணேஷ் இருவரும் இணைந்து இத்தொடரைத் தொடக்கிவைத்தனர். சென்னையின் எஃப்.சி அணியின் அண்டர் 15 வீரர் ராகுல், கிளப்பின் துணைத் தலைவர் ஹிரன் மோடி ஆகியோர் உடனிருந்தனர். 

சென்னையின் எஃப்.சி

"இந்தத் தொடரின்மூலம் திறமையான இளம் வீரர்களைக் கண்டறிந்து, சென்னையின் எஃப்.சி அணியின் 'யூத் டீம்'களுக்குள் அவர்களை எடுப்பதுதான் இந்தத் தொடரின் முக்கியமான நோக்கம். ராகுல் போல நிறைய வீரர்களைக் கண்டெடுக்க வேண்டும்" என்று இத்தொடரின் நோக்கம் பற்றிக் கூறினார் சபீர் பாஷா. கடந்த சீசனில் நடந்த 13 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில், சென்னை அணியை வழிநடத்தியவர் ராகுல். 100 சதவிகித ரெக்கார்டோடு ஃபைனலுக்குள் நுழைந்த சென்னையின் எஃப்.சி அணிக்காகச் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் கொடுத்தவர். 
 
ஆசிய கோப்பைத் தொடர் நடந்துகொண்டிருந்ததால், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐ.எஸ்.எல் தொடர் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை, கௌஹாத்தியில் 26-ம் தேதி எதிர்கொள்கிறது.