`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன்! - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி | MSDhoni is Player of the Series

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (18/01/2019)

கடைசி தொடர்பு:18:40 (18/01/2019)

`அணிதான் முக்கியம்; எந்த இடத்திலும் இறங்கி விளையாடுவேன்! - விமர்சனத்துக்கு தொடர்நாயகன் தோனி பதிலடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், தொடர்ந்து மூன்று அரை சதங்களை அடித்து அசத்தியுள்ளார் தோனி. சிட்னியில் 51, அடிலெய்டில் 57, மெல்போர்ன் மைதானத்தில் 87 ரன்கள் என, இந்த ஆண்டை தித்திப்பாகத் தொடங்கியுள்ளார். இந்தத் தொடரில் மூன்று அரை சதங்கள் அடித்த தோனி, தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தோனி

Credits: ICC

இன்றைய போட்டிக்குப் பின்னர் பேசிய தோனி, “இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது. எனவே, பேட்ஸ்மேன்களால் நினைத்த இடத்தில் பந்தை அடிப்பதற்குச் சிரமமாக இருந்தது. கேதர் ஜாதவ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். நான் எந்த இடத்திலும் இறங்கி விளையாடவும் தயாராக இருக்கிறேன். 14 ஆண்டுகள் விளையாடிய பிறகு, நான் 6-வது இடத்தில் களமிறங்க மாட்டேன். 4-வது இடத்தில்தான் விளையாடுவேன் எனச் சொல்ல முடியாது. அணிக்கு எது தேவைப்படுகிறதோ, அதைச் செய்வதே முக்கியமானதாகக் கருதுகிறேன்'' என்றார்.

கிரிக்கெட்

இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 1000 ரன்களை அடித்த இந்திய வீரர்களில் பட்டியலில் சச்சின், கோலி, ரோஹித் அடுத்தபடியாக தோனி இணைந்துள்ளார். தோனியின் பேட்டிங் குறித்து கடந்த சில ஆண்டுகளாக முன்னணி வீரர்கள் அதிருப்தி தெரிவித்துவந்தனர்.  தோனியால் முன்பு போல ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடியவில்லை; அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்பன போன்ற கருத்துகளைச் சிலர் தெரிவித்துவந்தனர். ஸ்டெம்புக்குப் பின்னால் தோனிதான் கில்லி. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவரது பேட்டிங் ஃபார்ம் தான் சற்று கவலை அளிக்கும் விதமாக இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு தோனி ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் இந்தாண்டின் தொடக்கத்தில், தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.