ஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்! #AusVInd | Finch, who has been dismissed by Bhuvneshwar Kumar three out of three times in the series

வெளியிடப்பட்ட நேரம்: 23:09 (18/01/2019)

கடைசி தொடர்பு:10:30 (19/01/2019)

ஆரோன் ஃபின்ச்சை அசால்ட் செய்த புவனேஷ்வர் - மூன்று போட்டிகளிலும் நடந்த சோகம்! #AusVInd

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் பல வருடங்களுக்குப் பிறகு இனித்திருக்கிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற நிலையில் கைப்பற்றிய இந்திய அணி. இன்று நடந்து முடிந்த ஒருநாள் தொடரையும் 1-2 என்ற கணக்கில் வென்று சரித்திர சாதனையைப் பெற்றது. ஒருநாள் தொடரில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. மூன்று ஆட்டங்களிலும் சேர்த்து எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

புவனேஷ்வர்

முக்கியமாக ஆஸ்திரேலியாவின் அதிரடி ஓப்பனரும் கேப்டனுமாகிய ஆரோன் ஃபின்ச்சை மூன்று போட்டிகளிலும் ஆட்டமிழக்கச் செய்தார் புவனேஷ்வர் குமார். ஆரோன் ஃபின்ச்சுக்கு லைனுக்குள் வந்து பிட்சாகி ஸ்விங் ஆன பந்துகளை எதிர்கொள்வதில் கடினம் இருந்தது. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட புவனேஷ்வர் எளிதாக அவரின் விக்கெட்டுகளைச் சாய்த்தார்.  

ஆரோன் ஃபின்ச்

முதலிரண்டு போட்டிகளில் ஃபின்ச்சை எளிதாகப் போல்ட் செய்த புவனேஷ்வரால் இன்றைய போட்டியில் போல்ட் செய்ய இயலவில்லை. பிட்ச்சில் அதிக நேரம் தாக்குப்பிடித்த ஃபின்ச்சை ஆட்டமிழக்கச் செய்ய புவனேஷ்வரும் தோனியும் புது வியூகம் அமைத்தனர். அதன்படி புவனேஷ்வர் கீரிஸை தொடுவதற்கு முன்னரே பந்தை ரிலீஸ் செய்தார். பந்தின் வேகத்தை இதன் மூலம் மாற்றியமைத்து ஃபின்ச்சால் பந்தைக் கணிக்க முடியாதபடி செய்ய முயன்றார். ஆனால், அம்பயரின் கண்பார்வைக்கு முன்னதாகவே பந்தை ரீலிஸ் செய்ய அது டெட் பாலாகிப் போனது. 

ஆரோன் ஃபின்ச்

இதனால் வருத்தமடைந்தார் புவனேஷ்வர். ஆனால், அடுத்த பந்தே யார்க்கராக வீச எல்.பி.டபுள்யூ ஆனது. ஃபின்ச்சும் நடையைக் கட்டினார். ஒரு நாள் போட்டி தொடரில் மூன்று போட்டிகளிலும், புவனேஷ்வரின் பந்துவீச்சில் வீழ்ந்தார் ஃபின்ச். மூன்று போட்டிகளிலும் சேர்த்து புவனேஷ்வர் பந்துவீச்சில் 37 பந்துகளைச் சந்தித்த ஃபின்ச் 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். புவனேஷ்வரின் பந்துவீச்சு கேள்விக்குள்ளாக்கப்பட்டதற்கு இந்தத் தொடரில் இவரின் சீரான சிறப்பான பந்துவீச்சின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.