`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்?’ - கங்குலி சொல்லும் லாஜிக் | Ganguly praises Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:10:00 (19/01/2019)

`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்?’ - கங்குலி சொல்லும் லாஜிக்

ஒருநாள் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி 4வது வீரராகக் களமிறங்குவதே சிறந்தது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

தோனி

ஆஸ்திரேலிய அணிக்கெதிராக மெல்போர்னில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கெதிராக இருநாடுகள் இடையிலான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியில் 87 ரன்கள் குவித்த தோனி, தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்திருந்தார் தோனி. தன் மீதான விமர்சனங்களுக்குத் தோனி பேட் மூலம் பதிலடி கொடுத்ததாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

கங்குலி

இந்தநிலையில், தோனியைப் பொறுத்தவரை அவர் 4வது வீரராகக் களமிறங்குவதே சிறந்தது எனக் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தியா டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கங்குலி, ``இந்தத் தொடரில் தோனி விளையாடிய விதம் சிறப்பானது. அவர் இப்படி விளையாடியதைப் பார்த்து நீண்ட நாள்கள் ஆகின்றன. ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருக்கிறது. 

தோனி

அடிலெய்டு ஒருநாள் போட்டியில் தோனி விளையாடிய விதம் விமர்சனத்துக்குள்ளானது. அந்த இன்னிங்ஸில் அவர் மெதுவாக ரன் சேர்த்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த இன்னிங்ஸ் அவருக்குக் கொடுத்திருக்கும் நம்பிக்கைதான், அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் நாம் பார்த்தது. என்னைப் பொறுத்தவரை கேஜர் ஜாதவ் 5வது வீரராகக் களமிறக்கப்படலாம். தோனி, 4வது வீரராகக் களமிறங்குவதே சிறந்தது. இந்திய அணி, இந்தப் பேட்டிங் ஆர்டரோடு பயணிக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனெனில், நீங்கள் ஒருவருக்கு வாய்ப்புக் கொடுத்தீர்கள், அதை அவர்  இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறார். எனவே, கோலி, 3வது வீரராகவும் தோனி 4வது வீரராகவும் களமிறங்கலாம். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரைக் களமிறக்கலாம்.

தோனி

    
தோனி, 4வது வீரராகத் தோனி களமிறங்குவதே சிறப்பாக இருக்கும். ஏனெனில், அந்த இடம்தான் அவருக்கு செட்டில் ஆக நேரம் கொடுப்பதுடன், ரன் குவிக்கவும் ஏதுவாக இருக்கும். எனவே, ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தப் பேட்டிங் ஆர்டர் இந்திய அணிக்குக் கைகொடுக்கும்’’ என்று பேசியிருக்கிறார்.