`ஐ.டி கார்டு எங்கே?’ - ஆஸ்திரேலியா ஓப்பனில் ரோஜர் ஃபெடரரை நிறுத்திய பாதுகாவலர் | Rules are rules! Roger Federar stopped in gate

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (19/01/2019)

கடைசி தொடர்பு:20:20 (19/01/2019)

`ஐ.டி கார்டு எங்கே?’ - ஆஸ்திரேலியா ஓப்பனில் ரோஜர் ஃபெடரரை நிறுத்திய பாதுகாவலர்

ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரின்போது அடையாள அட்டை அணியாமல் மைதானத்துக்குள் நுழைய முயன்ற முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரைப் பாதுகாவலர் ஒருவர் நிறுத்திய சம்பவம் நடந்திருக்கிறது.

ஃபெடரர்


உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்குபெறும் ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் கலந்துகொண்டு விளையாடுகிறார். மெல்போர்னில் உள்ள விளையாட்டு அரங்கிற்குள் செல்வதற்காக ஃபெடரர் வந்தார். அரங்கத்தில் இருந்த பாதுகாவலர், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அடையாள அட்டையைத் தான் அணிந்து வராததால், ஃபெடரர் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் தனது அணியினர் வருகைக்காக அமைதியாக நுழைவு வாயிலில் காத்திருந்தார். அவர்கள் வந்தவுடன், அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு உள்ளே சென்றார். ஃபெடரர் மட்டுமின்றி, அனைத்து வீரர்களிடமும் அடையாள அட்டை கோரப்பட்டது. மரியா ஷரப்போவா-விடம் பெண் பாதுகாவலர் அடையாள அட்டையைக் கோரினார். அவரும் அதைக் காண்பித்துவிட்டே உள்ளே சென்றார்.

டென்னிஸ்


இந்த வீடியோக்கள், சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. 'இதுதான் ஃபெடரரின் பண்பு. அந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால், நான் யார் தெரியுமா என்று வாக்குவாத்தில் ஈடுபட்டிருப்பார்கள்' என அவரது ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.  ஆஸ்திரேலியா ஓப்பனில் பங்கேற்க வரும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர் மற்றும் செய்தியாளர்கள் என அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்களது பெயர், புகைப்படம், இந்தத் தொடரில் அவருடைய பொறுப்பு மற்றும் பார்கோடுகள் இடம்பெற்றுள்ளன. விளையாட்டு அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, பாதுகாவலர்களால் அவை ஸ்கேன் செய்யப்பட்டு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.